வேலூர்: `தொடர் குற்றங்களுக்குக் கடிவாளம்’ - 36 நாள்களில் 37 பேர் மீது `குண்டாஸ்!’

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிக்குள்ளாக 28 பேர் `குண்டர்’ தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே மணல் கடத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வக்கிரம் போன்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால், அவர்களின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் `குண்டாஸ்’ நடவடிக்கையை எடுத்திருக்கிறார். இதேபோல, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 5-ம் தேதிக்குள்ளாக 9 பேர் மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது.

எஸ்.பி மணிவண்ணன்

இதன் விவரம் குறித்துப் பேசுகிற போலீஸார், ``தொடர் `கஞ்சா’ கடத்தலில் ஈடுபட்டு வந்த விஜய், நெடுஞ்செழியன், விக்னேஷ் என்பவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களைப் போன்றே தொடர் அடிதடி உள்பட கொலைக் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருள்பாண்டியன் என்கிற அருண்பாண்டியன் மற்றும் வேலு என்கிற வேலன் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேற்கண்ட இந்த 5 பேர்மீதும் ஆகஸ்ட் 1-ம் தேதி குண்டாஸ் பாய்ந்தது.

இதேபோல, வேலூர் புறநகர்ப் பகுதிகளை, கடந்த பத்தாண்டுகளாகப் பதறவைத்துக்கொண்டிருந்த பிரபல ரௌடி ‘எம்.எல்.ஏ ராஜா’ என்ற அரியூர் ராஜா கடந்த ஜூலை 2-ம் தேதி இரவு நட்ட நடுவீதியில் கொடூரமாகக் கொல்லப்பட்டான். இந்த வழக்கில் கைதான அரியூர் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ், அஜீத்குமார், ராஜேஷ், பூர்ணசந்திரன், கார்த்திகேயன், அபி என்கிற அபினேஷ் ஆகிய 6 இளைஞர்களும் விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் மீதும் ஆகஸ்ட் 5-ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

கொலை [ சித்திரிப்புப் படம் ]

இதேபோல, பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியான தினேஷ் என்கிற 19 வயது இளைஞனும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். `போக்சோ’ வழக்கில் சிக்கிய தினேஷ் மீதும் ஆகஸ்ட் 5-ம் தேதியன்றே `குண்டர்’ சட்டம் பாய்ந்திருக்கிறது. மேலும், `இது போன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எஸ்.பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்’’ என்கின்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/fk0YLU3

Post a Comment

0 Comments