மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செயற்கை காலை அகற்றச் சொல்லி போலீஸார் கட்டாயப்படுத்தியதாக, மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் பேசியுள்ள வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற மாற்றுத்திறனாளி, தான் வெளியிட்டுள்ள வீடியோவில், "மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது, இடதுகாலில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை காலை அகற்ற காவல்துறையினர் கட்டாயப்படுத்தினார்கள். அதை கழட்டிவிட்டு சக்கர நாற்காலியில் செல்ல 500 ரூபாய் பணம் கேட்டனர்" என்று கூறியுள்ளவர், அங்கு பணியில் இருந்த அர்ச்சகர்கள் தன்னை இழிவுபடுத்தி பேசியதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த சம்பவத்தை மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (08-08-2024) மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய நுழைவு போராட்டம் நடத்த உள்ளதாக 'தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க'த்தினர் அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தமிழ்ச்செல்வி வந்தபோது அவருடைய பையில் சிறிய அளவிலான கத்தி இருந்ததை கண்டுபிடித்த காவலர்கள், பாதுகாப்பு காரணத்தால் அவற்றை பொருள்கள் வைப்பறையில் வைத்துவிட்டுச் செல்ல கூறியுள்ளனர். அவருடன் வந்தவர்கள் பொருள்களை வைப்பறையில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் அவர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய இருந்ததால், அவர் செயற்கை காலில் இணைக்கப்பட்டிருந்த காலணிகளை அகற்றிவிட்டு வீல்சேரில் செல்லுங்கள் என்று காவலர்களும், கோயில் ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் காலணிகளை அகற்றிவிட்டு வீல்சேரில் சென்று நல்லவிதமாக சாமி தரிசனம் செய்துள்ளார். அன்னதானம் சாப்பிட்டுவிட்டு மதியம் 12:30 மணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் முற்றிலும் உண்மைக்கு புறம்பாக காவல்துறையினரும், கோயில் பணியாளர்களும் தன்னை சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்ததாக சமூக வலைதளத்தில் தவறான வீடியோவை வெளியிட்டுள்ளார்" என விளக்கம் தெரிவித்துள்ளனர்.
from Vikatan Latest news https://ift.tt/R6VpYwx
0 Comments