இந்தியாவின் தங்க நம்பிக்கை தகர்ந்திருக்கிறது. நீரஜ் சோப்ரா கட்டாயம் தங்கம் வெல்வார், தன்னுடைய ஒலிம்பிக்ஸ் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தோம்.
ஆனால், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு நீரஜ் சோப்ராவை வீழ்த்தியிருக்கிறார். ஒலிம்பிக்ஸ் ரெக்கார்டோடு 92.97 மீட்டருக்கு வீசி அவர் தங்கம் வெல்ல நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி மட்டுமே கிடைத்துள்ளது
நீரஜ் சோப்ரா மீது பெரும் நம்பிக்கை இருந்திருந்தாலும் அவருடைய கரியரில் அவர் இதுவரை 90 மீ மார்க்கை கடந்ததே இல்லை என்பது கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. இறுதிப்போட்டியில் அவருடன் களமிறங்கிய ஏனைய 11 வீரர்களில் 5 வீரர்கள் 90 மீட்டருக்கு மேல் வீசி தங்களின் பெஸ்ட்டை வைத்திருந்தனர் . நீரஜின் பெஸ்ட்டே 89.94 மீட்டர்தான். அதற்கு மேல் அவர் வீசியதே இல்லை. ஆக, இறுதிப்போட்டியில் யாரும் 90 மீட்டருக்கு மேல் வீசாமல் இருந்தால் நீரஜ் தங்கம் வெல்ல வாய்ப்பிருக்கிறது எனும் நிலையே இருந்தது. ஆனால், களத்தில் ட்விஸ்ட் நடந்தது.
இறுதிப்போட்டியில் முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா ஃபவுல் ஆகினார். அர்ஷத் நதீமும் முதல் வாய்ப்பில் ஃபவுல்தான் ஆகியிருந்தார். இரண்டாவது வாய்ப்பில்தான் அர்ஷத் நதீம் அந்த ராட்சத வீச்சை எறிந்தார். அந்த இரண்டாவது வாய்ப்பில் அர்ஷத் வீசிய ஈட்டி 92.97 மீட்டரை எட்டியது. இது ஒரு ஒலிம்பிக்ஸ் ரெக்கார்ட். இப்போது நீரஜ் மீது அழுத்தம் ஏறியது.
இந்தச் சூழலில் நீரஜ் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் 89.45 மீட்டருக்கு வீசியிருந்தார். அவருடைய சீசன் பெஸ்ட் இதுதான். ஆனால், இது இரண்டாம் இடத்தில் நீடிக்கத்தான் போதுமானதாக இருந்தது. அர்ஷத் நதீமின் 92.97 என்கிற எறிதலை வேறு எந்த வீரராலுமே கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை.
அர்ஷ்த் தனது அடுத்தடுத்த வாய்ப்புகளில் 88.72, 79.40, 84.87,91.79 மீட்டர் தூரங்களுக்கு ஈட்டியை வீசியிருந்தார். 6 வாய்ப்புகளில் இரண்டு முறை 90 மீட்டருக்கு மேல் என்பது அசாத்தியம். அர்ஷத் மிரட்டிவிட்டார். நீரஜ் தனது மூன்றாவது மற்றும் நான்காவது வாய்ப்புகளில் ஃபவுல் ஆகியிருந்தார். நீரஜ் சோப்ரா எப்போதுமே தனது முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்துவிடுவார் என்பதால் நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது. இப்போது கடைசி இரண்டு வாய்ப்புகள் மட்டுமே நீரஜூக்கு இருந்தது. கடைசிக்கு முந்தைய வாய்ப்பிலும் கட்டுப்பாட்டை இழந்து ஃபவுல் ஆகியிருந்தார். கடைசி ஒரு வாய்ப்பு மட்டுமே இருந்தது. இந்த வாய்ப்பிலும் நீரஜ் சரியாக வீசவில்லை, ஃபவுல்தான்.
6 வாய்ப்புகளில் ஒரே ஒரு முறைதான் நீரஜ் முறையாக வீசியிருந்தார். அந்த ஒரு எறிதலே அவருக்கு வெள்ளியையும் வென்று கொடுத்துவிட்டது.
அர்ஷத் நதீமும் நீரஜ் சோப்ராவும் நல்ல நண்பர்கள்தான். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்த போது அர்ஷத் நதீம் 5 வது இடம்பிடித்திருந்தார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா ஆடாமல் விட்ட காமென்வெல்த் கேம்ஸ் 2022 வில் அர்ஷத் நதீம் 90 மீட்டருக்கு மேல் வீசி தங்கம் வென்றிருந்தார். அப்போதே நீரஜ் சோப்ரா அர்ஷத் நதீமை மனமுவந்து பாராட்டியிருந்தார். கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் தங்கம் வெல்ல அர்ஷத் வெள்ளி வென்றிருந்தார். அர்ஷத் நீரஜூக்கு நல்ல போட்டியாளராக இருந்திருக்கிறாரே தவிர நீரஜை வெல்லக்கூடியவராக இருந்ததில்லை. பாரிஸ் ஒலிம்பிக்ஸில்தான் அது நடந்திருக்கிறது.
பாகிஸ்தானுக்காக 1992 ஒலிம்பிக்ஸூக்கு பிறகு பதக்கம் வெல்லும் முதல் வீரர் இவர்தான். இதற்கு முன் பாகிஸ்தான் ஹாக்கி அணி மட்டுமே ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றிருக்கிறது. அதன்பிறகு இப்போதுதான் அந்த நாட்டுக்கு ஒரு தங்கம் கிடைக்கிறது. இந்த ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தான் சார்பில் 7 வீரர் வீராங்கனைகள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்ற 6 பேரும் பங்களிப்போடு திருப்திப்பட்டுக்கொள்ள அர்ஷ்த் மட்டும்தான் பதக்கம் வென்றிருக்கிறார். ஆக, பாகிஸ்தானுக்கு இது ஒரு வரலாற்று வெற்றி, வரலாற்று பதக்கம்.
நீரஜ் கட்டாயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டதால் நமக்கு இது ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ்களில் ஒரு வீரர் பதக்கம் வெல்வதே பெரிய விஷயம்தான். நீரஜ் அதை செய்திருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
from Vikatan Latest news https://ift.tt/usQh3Cf
0 Comments