தங்கநகைக் கடன்... எச்சரிக்கும் ஆர்.பி.ஐ கவர்னர்!

கடந்த 8-ம் தேதியன்று மும்பையில் கூடிய ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் (Monetary Policy Committee - MPC) முக்கியமான ஓர் எச்சரிக்கையை விடுத்தார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். ‘‘டாப்அப் லோன் மற்றும் தங்கநகை அடமானக் கடனை வாங்கி, மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதுடன், இந்தக் கடனைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களை வற்புறுத்தி இருக்கிறார் ஆர்.பி.ஐ கவர்னர்.

மிகச் சரியானதொரு விஷயத்தைதான் சொல்லி இருக்கிறார் ஆர்.பி.ஐ கவர்னர். காரணம், இன்றைக்கு வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் மிக அதிக அளவில் இந்த இரு கடன்களையும் தருகின்றன. இந்தக் கடன்களையே தருவதில் வங்கிகளின் பங்கு 39% எனில், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பங்கு 61 சதவிகிதமாக உள்ளது. நகைக் கடனை அளிப்பதில் முன்னணியில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே ரூ.1.6 லட்சம் கோடி அளவுக்கு நகைக் கடன்களை அளித்திருக்கின்றன. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.2 கோடி வரை நகைக் கடன் தரத் தயார் என விளம்பரம் செய்கிறது.

அதே போல, வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அளித்திருக்கும் டாப்அப் கடன்களின் அளவு பல லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது. ஒரு வீட்டின் மதிப்பில் 80% வரை இந்தக் கடன் தரப்படுவதால், வீட்டின் மதிப்பு உயர உயர, இந்தக் கடன் அளவும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் இந்தக் கடன் வாங்கியவர்கள் மேலும் மேலும் கடன் வாங்குபவர்களாக இருக்கிறார்களே தவிர, கடனில் இருந்து வெளிவந்த பாடில்லை!

தங்கநகை அடமானக் கடன் மூலமும், டாப்அப் லோன் மூலமும் பெறும் பணமானது மதிப்பை உயர்த்தும் உருப்படியான சொத்துகளில் முதலீடு செய்யப் படாமல், வேறு ஏதோ ஒன்றில் செலவு செய்யப்படுகிறது. இதனால், இந்த இரு கடன்களிலும் வாராக்கடன் அதிகரிக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. வங்கிகளின் வாராக்கடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் நிலையில், இந்த இரு கடன்கள் மூலம் வாராக்கடன் அதிகரிக்குமோ என்கிற அச்சத்தில்தான் ஆர்.பி.ஐ கவர்னர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் மக்களின் டெபாசிட் பணம் அபரிமிதமாகப் பெருகிவரும் நிலையில், கடன் தரும் வாய்ப்பு அந்த நிறுவனங் களுக்கு குறைந்துகொண்டே வருகிறது. தொழில் கடன் ரிஸ்க்கானதாக மாறிவரும் நிலையில், வீட்டின் மதிப்பின் அடிப்படையில் டாப்அப் லோனும், தங்கநகை அடிப்படையில் கோல்டு லோனும் தாராளமாகத் தருகின்றன. ஆனால், ‘வீடும் தங்கநகையும் போனாலும் பரவாயில்லை. நம்மால் கடனைத் திரும்பக் கட்ட முடியாது’ என்று மக்கள் முடிவெடுக்கும் நிலை உருவானால், வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் மிகப் பெரிய நிதிச் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நன்கு உணர்ந்துதான் ஆர்.பி.ஐ கவர்னர் இப்படி பேசி இருக்கிறார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பேசியிருப்பதில் பொதிந்திருக்கும் உண்மைகளை, நிறுவனங்கள் மட்டுமல்ல, மக்களும் தீவிரமாக யோசிக்க வேண்டும்!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/nfvpEmz

Post a Comment

0 Comments