கேரள மாநிலம் ஆலப்புழா பூச்சக்கல் பகுதியைச் சேர்ந்த டோனா ஜோஜி(22). ராஜஸ்தானில் ஒரு கல்லூரியில் ஃபாரன்சிக் சயின்ஸ் படித்துமுடித்து, திருவனந்தபுரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர் இரண்டுநாட்களாக கடும் வயிறுவலியால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டோனா ஜோஜி-யை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஒரு வாரத்துக்குமுன் குழந்தை பெற்றுள்ளதாக தெரிவித்தனர். அது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மருத்துவமனை சார்பில் சுகாதாரத்துறை அதிகாரிக்கும், போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் டோனா ஜோஜி-க்கு குழந்தை பிறந்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. மேலும், பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில்போட்டு தனது காதலன் தாமஸ் ஜோசப்பிடம் கொடுத்து அனுப்பியதும், காதலனும், அவரது நண்பனும் சேர்ந்து குழந்தையை புதைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து டோனா ஜோஜி, காதலன் தாமஸ் ஜோசப், அவரின் நண்பர் அசோக் ஜோசப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார், "டோனா ஜோஜி ராஜஸ்தானில் ஃபாரன்சிக் சயின்ஸ் படித்தபோது அங்கு, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்த அம்பலப்புழா-வை அடுத்த தகழிவிருப்பாலா பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஜோசப்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். டோனா ஜோஜி படிப்பு முடித்து பயிற்சிக்காக திருவனந்தபுரத்துக்கு வந்தபிறகும் அவர்களது காதல் தொடர்ந்துள்ளது.
காதலிக்கும்போதே டோனா ஜோஜியும், தாமஸ் ஜோசப்பும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக டோனா ஜோஜி கர்ப்பமானார். ஆனால் அதை வீட்டினருக்கு தெரியாமல் மறைத்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்புவரை யாருக்கும் சந்தேகம் வராதபடி வெளியில் நடமாடியுளார். கடந்த 7-ம் தேதி அதிகாலை வீட்டில் யாருக்கும் தெரிந்துவிடாதபடி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தொப்பிள்கொடி துண்டிப்பது உள்ளிட்டவைகளை சுயமாக செய்துள்ளார். பின்னர் குழந்தையை துணியில் சுற்றி படிக்கட்டுக்கு கீழே மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு காதலன் தாமஸ் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். தாமஸ் ஜோசப் தனது நண்பர் அசோக் ஜோசப்புடன் 7-ம் தேதி நள்ளிரவு டோனா ஜோஜி-யின் வீட்டுக்குச் சென்றுள்ளார். டோனா ஜோஜி குழந்தையை பாலித்தின் பையில் போட்டு காதலன் தாமஸ் ஜோசப்பிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். 'அம்ம தொட்டில்' என்ற தொட்டில்குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கும்படி டோனா ஜோஜி குழந்தையை காதலனிடம் கொடுத்தனுப்பியதாக கூறினார்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை எனவும், குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டு சில மணி நேரம் கழித்து நினைவு திரும்பியதால் குழந்தைக்கு முதற்கட்ட கவனிப்புகளை செய்ய முடியவில்லை எனவும் டோனா ஜோஜி தெரிவித்திருந்தார். இதையடுத்து தொடக்கத்தில் அம்ம தொட்டில்களில் குழந்தையை விட்டிருக்கலாம் என தேடினோம். ஆனால், தாமஸ் ஜோசப் தனது நண்பன் அசோக் ஜோசப் உதவியுடன் அம்பலப்புழா பகுதியில் ஒரு வயல்வெளிப்பகுதியில் குழந்தையை புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். டோனா ஜோஜி-யும், தாமஸ் ஜோசப்பும் காதலித்தது இரு வீட்டாருக்கும் தெரியும். அவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதித்திருக்கிறார்கள். இதற்கிடையே கர்ப்பத்தை கலைக்க முயன்று அதற்காக மாத்திரை சாப்பிட்டுள்ளா டோனா ஜோஜி. கர்ப்பம் கலைந்திருக்கலாம் என அசால்ட்டாக இருந்துள்ள நிலையில் டோனா ஜோஜி குழந்தை பெற்றுள்ளார். குழந்தை பிறந்த பிறகு வீடியோ காலில் காதலன் தாமஸ் ஜோசப்பை அழைத்து குழந்தையை காண்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களது போன் கால்கள், சாட்டிங் ஆகியவற்றை பரிசோதித்து வருகிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/rQFLWmP
0 Comments