மதுரையில் உதயநிதி!
சமீபத்தில் மகளிருக்கு உதவி திட்டம் வழங்குவது உள்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி மதுரைக்குச் சென்றிருந்தார். மதுரை ஒத்தக்கடையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி என பல்வேறு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அமைச்சர் மூர்த்தி பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நலத்திட்ட உதவிகள் நடந்து முடிந்தது ஒருபக்கம் இருக்க துறை ரீதியான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
நிகழ்ச்சி நடந்து முடிந்திருந்த நிலையில், பேருந்து நிலையம், ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டிருந்தார். பேருந்து நிலையத்தில் கழிவறை, காத்திருப்பு அறை சென்று பார்த்ததுடன் அங்கிருந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அடுத்ததாக, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உதயநிதி தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வளர்ச்சி திட்டங்கள் குறித்து சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாற்றப்பட்ட அதிகாரிகள்!
ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்திருந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
என்ன நடந்தது என்பது குறித்து மதுரை அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகப் புகார்கள் வந்திருந்தன. இந்த நிலையில்தான் மதுரை வந்திருந்த அமைச்சர் உதயநிதி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதில், கழிவறை தொடங்கி பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதிகள் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த பயணிகளும் பல புகார்களைத் தெரிவித்திருந்தனர். அங்கேயே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருந்தார் அமைச்சர். அதேபோல, ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
அமைச்சர் உதயநிதி வருவதற்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று மதுரையைச் சுற்றியுள்ள அரசு மருத்துவமனை தொடங்கி, மாணவர்கள் விடுதிகள் வரை திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து உதயநிதிக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அமைச்சர் உதயநிதி மேற்கொண்ட ஆய்வு மற்றும் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும் சரியாக பணிகள் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார் உதயநிதி. அப்படிதான் மாணவர் விடுதியில் சமையலர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இன்னும் அந்த விடுதி வார்டன் உள்பட இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர்த்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் என மூவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்றார்கள் விரிவாக.
from Vikatan Latest news https://ift.tt/vhD1kc3
0 Comments