தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் ஜூலி (வயது 45). இவருக்கு கல்லூரி படிக்கும் பாஸ்டின் நெல்சன் என்ற மகனும், தேவி என்ற மகளும் உள்ளனர். கட்டடத் தொழிலாளியாக இருந்த இவரது கணவர் கண்ணன், கடந்த 2020-ல் நாகப்பட்டினத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு டெய்லர் வேலை செய்து பிள்ளைகளோடு கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார் ஜூலி.
இந்த நிலையில், கணவர் இறப்புக்கு நிவாரணம் கேட்டு நான்கு ஆண்டுகளாக போராடி வரும் ஜூலியை, அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை தொடர்ந்து அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஜூலி, ''நாகையில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்ட இடத்திலேயே தங்கி கட்டடம் கட்டும் வேலை செய்து வந்தார் என் கணவர். திடீரென ‘வேலை செய்து கொண்டிருந்தபோது என் கணவர் இறந்துவிட்டதாக’ தகவல் வந்தது. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு ஓடினோம்.
கணவருடன் வேலை செய்தவர்கள், ‘அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார்’ என்றனர். கட்டுமானப் பணியை ஒப்பந்தம் எடுத்திருந்த ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் நிறுவனத்தினர், ‘நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக’ சொன்னார்கள். இதெல்லாம் எனக்கு அவரது இறப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. படிக்கும் வயதில் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, ஒரு வருடம் அலைந்து போராடிய பின்னரே இறப்பு சான்றிதழை வாங்க முடிந்தது.
2021-ல் ‘என் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக’க் கூறி, அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு கொடுத்தேன். 'உன் கணவர் இறப்பிற்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்ம்மா...' என கலெக்டரும் நம்பிக்கை தந்தார். பின்னர் திருச்சியில் உள்ள தொழிலாளர் நல இணை ஆணையர் கவனத்துக்கும் என் குடும்ப நிலையைக் கொண்டுசென்றார். தொழிலாளர் நீதிமன்றமும் எனக்கு நிவாரணம் கிடைப்பதற்காக, என் கணவர் இறப்புக்கான வழக்கை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்தது.
இரண்டு வருடங்கள் விசாரணை நடந்தது. இதில் எதிர்தரப்பினரான கட்டுமான நிறுவனத்தினர் ஆஜர் ஆகவில்லை. இதைத் தொடர்ந்து 2023-ல் எனக்கு ரூ.13 லட்சம் நிவாரணம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாதங்கள்தான் கடந்தது... பணம் என் கைக்கு வரவில்லை. மீண்டும் தொழிலாளர் நல இணை ஆணையரிடம் முறையிட்டேன். ஒப்பந்ததாரரிடம் வசூல் செய்து தருவதாக தெரிவித்தார். இதற்கிடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஒரு வருடத்திற்கு பிறகு எனக்கு வழங்கிய தீர்ப்புக்கு தடை கேட்டு, ஸ்டே ஆர்டர்’ வாங்கிவிட்டனர் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தினர்.
இந்தச் சூழலில், என் பிள்ளைகள் படிப்பு தடைபடாமல் இருக்க படாதபாடு பட்டேன். தொடர்ந்து நீதி கேட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனை பார்த்து மனு கொடுத்தேன். அவர் என்னிடம், 'நீ எந்த கட்சிம்மா, தி.மு.க-வா, உறுப்பினர் கார்டு வச்சிருக்கியா?' என்றார். ‘இல்லை சார்’னு என்னோட நிலையை சொன்னதும், 'நான் பிரசாரத்தில் பிஸியா இருக்கேன். இடைத்தேர்தல் முடியட்டும்' என்றார். அதன் பின்னர் அமைச்சரின் செல் நம்பருக்கு போன் செய்து கேட்டேன். ‘இடைத்தேர்தல் வெற்றி விழாவில் இருக்கேன்’ என்று பதில் சொன்னார்.
ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் அமைச்சருக்கு போன் செய்தேன். எடுத்ததும் அவர், 'ஏம்மா என் உயிரை வாங்குற... நான் உனக்கு மட்டும் அமைச்சர் இல்லை, தமிழ்நாட்டுக்கு அமைச்சர், தஞ்சாவூர் கலெக்டர் கிட்ட பேசுறேன்' என சொல்லிவிட்டு ‘டக்’ என போனை வைத்து விட்டார். நான் சொல்ல வந்ததைக்கூட அவர் கேட்கவில்லை.
இப்போது என் மகன் கல்லூரி முடித்துவிட்டான். பீஸ் கட்டாததால் இதுவரை கல்லூரி நிர்வாகம் அவனுக்கு சர்டிஃபிகேட் தரவில்லை. அவன் மேல் படிப்பு படிக்க ஆசைப்படுகிறான். என் மகள் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அவளுக்கும் பீஸ் கட்ட வேண்டும். படிப்பிற்காக வாங்கிய கடன் வேறு என் கழுத்தை நெறிக்கிறது. கஞ்சிக்கு வழியில்லாத சூழலில் நான் தவித்து நிற்கிறேன்” என தழுதழுத்தார்.
இதுகுறித்து அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம். ''கட்டுமான நிறுவன நல வாரியத்தின் சார்பாக ஜூலிக்கு கடந்த 2022-ல் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் சமயத்தில் என்னை சந்தித்ததால், ‘தி.மு.க-வை சேர்ந்தவரா’னு கேட்டேன். அதை அவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். இது அனைவருக்குமான அரசு. லேபர் கோர்ட் உத்தரவிட்ட ரூ.13 லட்சம் வட்டியுடன் இரண்டு மாதத்திற்குள் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஜூலியின் குடும்பத்துக்கு என்ன தேவையோ அவை அரசு சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நிறைவேற்றி தரப்படும். நிச்சயம் அவரது கண்ணீர் துடைக்கப்படும்'' என்றார்.
from Vikatan Latest news https://ift.tt/RcKIj8i
0 Comments