பெண்கள் தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாகப் பேசும் சூழலை எப்போது சமூகம் உருவாக்கும்? - அவளின் சிறகு

கருவேல மரத்திற்குப் பஞ்சமே இல்லாத பொட்டல்காடு எங்கள் கிராமம். வாரத்திற்கு இரண்டு நாள் பொதுக் குழாயில் தண்ணீர் வரும். வரிசையில் நின்று ஆளுக்கு இரண்டு குடம் என தண்ணீர் பிடிக்க வேண்டும். எல்லா குடும்பமும் முதல் வரிசை தண்ணீர் பிடித்து விட்டால் மீண்டும் வரிசை முதலில் இருந்து தொடங்கும். இரண்டாம் வரிசை தண்ணீரெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வாய்க்கும். குடிக்க, குளிக்க என எல்லாவற்றுக்கும் அலுமினிய நிறத்தில் இருக்கும் அடிகுழாயில் தான் எங்கள் கிராமத்து பெண்கள் உயிரைக் கொடுத்து தண்ணீர் அடிப்பார்கள். அடிகுழாயில் தண்ணீர் அடித்து அடித்து கை காய்ப்பு என்பது எங்கள் கிராமத்து பெண்களுக்கு பழகிப்போன ஒன்று. தெருவிற்கு ஒரு இடத்தில் உப்பு தண்ணீர் அடி குழாய்கள் இருக்கும். நல்ல தண்ணீர் வேண்டுமானால் ஊருக்கு வெளியே இருக்கும் அடிகுழாய்க்குச் செல்ல வேண்டும். அந்த நல்ல தண்ணீர் குழாயை,'பேரீச்சம்பழத் தண்ணீர் குழாய்' என்பார்கள். பக்கத்து தெரு பாட்டியிடம் ஒரு முறை காரணம் கேட்ட போது, 'ரொம்ப தூரம் போயி மூச்சு இளைக்க அடிகுழாயில தண்ணீர் அடிச்சு எடுத்துட்டு வர்றாங்க. அந்தக் களைப்புல இந்தத் தண்ணிய குடிச்சா, இனிப்பா இருக்க மாதிரி தோணும். அதான் பேரீச்சம்பழ தண்ணீனு பேரு' என்று விளக்கம் கொடுத்தார். ஆம், உப்புத் தண்ணீர் குடித்து வளர்ந்த எங்களுக்கு அந்தத் தண்ணீர் சற்று இனிப்பாக இருப்பது போன்றுதான் தோன்றும்.

கிராமம்

பெண்கள் பாதுகாப்பாக இருக்க  வேண்டும் என்றால் ஒதுங்கித்தான் நிற்க வேண்டுமா?

தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, விடுமுறை நாள்களில் பெண்கள் ஒன்றாக சேர்ந்து பம்பு செட்டுக்கு செல்வது வழக்கம். ஒரே பம்பு செட்டில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் குளிப்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. கூட்டம் இல்லாத அந்த நாளில் பம்பு செட்டின் பின்னால் உடை மாற்ற சென்ற சீனி அக்கா திடீரென்று 'வீர்' என்று கத்தியபடியே அழுதுகொண்டே ஓடினாள். 'என்ன நடந்தது?' என்று புரியாத வயது அது. அடுத்த நாள் காலையில் சீனி அக்காவின் அம்மா எங்களை அழைத்து 'என்ன நடந்ததுனு யார்கிட்டயும் சொல்லக் கூடாது. இனிமே சீனி பம்பு செட்டுக்கு வரமாட்டா...பொட்டப்புள்ளைக பம்பு செட்டுக்கு போகுற வேல வெச்சுக்காதீங்க' என்று மிரட்டினாள். அதன் பின் முத்து, பழனி என ஒவ்வொரு பெண்ணாக பம்பு செட்டுக்கு வருவது குறைந்தது. ஆனால், இப்படி ஒவ்வொரு பெண்ணாக வராமல் போக காரணமாக இருந்த காய்கறி கடைக்காரர் கணேசனிடம் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மீசையை முறுக்கிக் கொண்டு நடந்த அவரின் முகத்தை இப்போது நினைத்தாலும் கோபம் வருகிறது. ஆனால், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஆணை தட்டிக்கேட்கும் தைரியம், வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி தனக்கான நியாயத்தை பெறும் சுதந்திரமும் எங்களுக்கு இல்லாமல் போனது 'எதனால்?' என்ற கேள்வி என் பதின் பருவத்தில் என்னை துரத்திக்கொண்டே இருந்தது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க  வேண்டும் என்றால் ஒதுங்கித்தான் நிற்க வேண்டுமா? ஒரு ஆண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை ஆண்களின் தார்மீக பொறுப்பு என சமூகம் எப்போது பழக்கும்?

'நல்ல வேல அந்தப் புள்ள பொழைக்கல... பொழச்சிருந்தா...'

கிராம தெய்வத்தின் கோவிலில் அமர்ந்து பெண்கள் பேசுவது கிராமங்களில் இயல்பானது. அப்படியான ஒரு சந்திப்பில் ஒன்றாக கூடி செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தோம். ஆறு வயது சிறுமி ஒருத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கும் செய்தியை வாசித்தேன். அப்போது கூட்டத்தில் இருந்த ராஜம் அக்கா, 'நல்ல வேல அந்தப் புள்ள பொழைக்கல... பொழச்சிருந்தா ஆயுசுக்கும் வலி' என சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் எல்லாரும் 'ஆமாம்' என்பதுபோல தலை ஆட்டினார்கள். பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட  ஒரு பெண் அதிலிருந்து மீண்டு வாழ்வதை விட, சாவது மேல் என பெண்கள் நினைப்பது எதனால் எனத் தோன்றியது... காரணம் கேட்ட போது, கம்மாயில் வைத்து, ரேஷன் கடையில் வைத்து, மளிகைக் கடையில் வைத்து என ஒவ்வொருவரும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசினார்கள். ஒவ்வொருவரின் கண்களிலும் மிரட்சியைப் பார்க்க முடிந்தது. 'வீட்ல இது பத்தி சொல்லிருக்கிங்களா?' என்ற கேள்வியை முன்வைத்தபோது, ' நீ ஒழுங்கா இருக்கணும்', 'சட்டைக்கு மேல துண்டு போட்டுட்டு போயிருக்கணும்', 'குனிஞ்ச தல நிமிராம நடக்கணும்'னு ஆயிரம் குறை சொல்லுவாங்க. சண்டை வந்தா குத்திக்காட்டி பேசுவாங்க. 

பாலியல் வன்கொடுமை

இந்த கேள்விக்கு சமூகம் எப்போது பதில் சொல்லும்?

பேச்சி தனக்கு நடந்த கொடுமையை ஊரில் சொன்னா, அவ படிச்சது எம்.எஸ்.சி....ஆனா, அவ இப்படியான ஒரு விஷயத்த வீட்டுல சொல்லி, ஊருக்கு தெரிஞ்சு, ஒருத்தணும் கட்டிக்க வரல. கடைசியா பத்தாவது படிச்ச ஒருத்தரை கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அவரு ஏதோ தியாகி மாதிரியும், இவளுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரியும் ஊரே பெருமை பீத்திக்கிச்சு. இதையெல்லாம் அனுபவிக்கிறதுக்கு நடந்ததை சொல்லாமலே இருந்துரலாம்' என குமுறினார்கள். அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதை விட, அதனை பற்றி வெளியே சொல்ல முடியாமல் மனதில் வைத்து, அது அழுத்தமாய் மாறியிருப்பது புரிந்தது. தவறே செய்யாமல் கூனி குறுகும் சூழலை ஏன் சமூகம் பெண்களுக்கு பழக்கியது? இப்போதும் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட ஒரு பெண் தனக்கு நிகழ்ந்ததை பொது வெளியில் பேசும்போது அது, அந்த பெண்ணுக்கு மோசமான அடையாளமாக, அவமானமாக மாறுவது எதனால்? விடை தெரியாத இந்த கேள்விக்கு சமூகம் எப்போது பதில் சொல்லும்?

அவள் என் கல்லூரித் தோழி. சென்னையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தாள். திடீரென்று ஊருக்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. 'அடிக்கடி தனியாக அமர்ந்து கொள்கிறாள்', 'வானத்தையே வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறாள்', 'யாரிடமும் சரியாக பேசவில்லை', 'எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறாள்' என அவளின் அம்மா என்னை அழைத்து பேசினார். அவளை தனியாக பைக்கில் அழைத்துச் சென்றேன். நீண்ட நேரம் அமைதியாக இருந்தவள், திடீரென என் மடியில் படுத்து அழத்தொடங்கினாள். அவளை தேற்றி காரணம் கேட்ட போது, அலுவலகத்தில் லிஃப்ட்டில் வைத்து ஒரு நபர் அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறார். அதை அலுவலகத்தில் சொன்ன போது, 'ஒழுங்கா ட்ரெஸ் பண்ணுங்க, எல்லா ஆண்களிடமும் ஃப்ரெண்ட்லியா இருந்தா இப்படித்தான்'னு பல குறைகளை அடுக்கிய பின், அந்த நபர் பற்றி விசாரிப்பதாகவும் சொல்லிருக்கிறார்கள். அவளை தேற்றிய பின், அவளின் அம்மாவை தனியாக அழைத்து நிகழ்ந்த உண்மையை சொன்ன போது, 'இதுக்குத் தான் வேலைக்குப் போக வேணாம்னு சொன்னேன். ஒழுங்கா ட்ரெஸ் பண்ணு, டி ஷர்ட் போடாதனு படிச்சு படிச்சு சொன்னேன்' என தலையில் அடித்து அழுது, அவளை மேலும் நோகடித்தார்.

சமூக ஊடகங்களில் பெண்கள்...

பெண்கள் ஆடையை தனக்கு பிடித்தாற்போல் அணிந்தால், தோழமையாக இருந்தால் அவளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தலாம் என்ற எண்ணம் இந்த ஆண்களுக்கு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை விட, அதை குடும்பங்களும் நம்பி பாதிக்கப்பட்டவளை இன்னும் ரணமாக்குகின்றனரே என்று தோன்றியது. சீனி அக்கா, பேச்சி...இன்னும் நம் வீடுகளில் வசிக்கும் தங்கை, அக்கா, அம்மா என எல்லா வயதினரும் ஏதோ ஒரு வயதில், ஏதோ ஒரு வழியில் பாலியல் வன்முறைக்கு உட்பட்டுதானே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இன்னும் பல குடும்பங்களில் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக கணவன்மார்களே தங்கள் மனைவிகளை வன்முறைக்கு உட்படுத்தும் செய்திகளை கேட்கத்தானே செய்கிறோம். பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையே இப்போதுதான் பேச ஆரம்பிக்கிறோம். இன்னும் கணவன் - மனைவி உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பேச இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?

 தனக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை அடக்கி வைத்த ஒரு பெண், ஒரு கட்டத்தில் தைரியம் வந்து சமூகத்தில் பேசும் போது, ' இவ்வளவு வருசம் எதுக்கு அமைதியா இருக்கணும்', 'ஒருத்தர பலி வாங்கணும்னா இத புது டெக்னிக்கா வெச்சிருக்காங்க' என பெண்களை தரக்குறைவாக பேசும் மக்கள் வாழும் சமூகத்தில் தானே அடுத்த தலைமுறை தேவதைகளின் வாழ்க்கையும் தொடர்கிறது. ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தால் உடனே அவளின் ஆடைகள், நடத்தைகள் பற்றிய பேச்சுகள் வருவது எதனால்? ஒரு பெண்ணை வன்முறைக்கு உட்படுத்துவது சுகம் என ஆண்களின் மனதில் விதைக்கப்பட்டு இருக்கும் குப்பை எப்போது சுத்தம் செய்யப்படும்?

அவளின் சிறகு

ஒரு பெண் தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை வெளிப்படையாக பேசும் ஒரு சூழலை எப்போது சமூகம் உருவாக்கும்... அண்ணன், அப்பா, மாமனார், நண்பன், தம்பி என எங்களைச் சூழ்ந்து இருக்கும் உங்களிடம் இந்த பெண் சமூகம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தாதீர்கள், பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட உங்கள் குடும்பத்து பெண்களை குற்றவாளியாகவும் பார்க்காதீர்கள். பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்ட பெண்ணின் அலறல்களுக்கும், வேதனைகளுக்கும், திடீர், திடீர் என பதறி பாதி தூக்கத்தில் எழும் வேதனைகளுக்கும் முற்றுப்புள்ளி என்பது எங்களின் உறவுகளான உங்களிடம் இருந்து தொடங்கட்டும்.

இது உங்களின் குடும்பத்தில் ஒருத்தியின் வேண்டுதலே... தவறே செய்யாமல் அழுத்தத்தில் இருக்கிறோம்... உங்களின் மாற்றம் எங்களுக்கான நிம்மதி பெருமூச்சாக இருக்கும். எங்களின் இறகுகள் மீது இருக்கும் அவமான அழுத்தம் குறைந்து, இறகுகள் மெலிதாக மாறி சிறகுகள் விரிய வழிவிடுங்கள்!!!


from Vikatan Latest news https://ift.tt/mp9neAw

Post a Comment

0 Comments