Sinus & Migraine headache: சைனஸ், மைக்ரேன் தலைவலி காரணங்களும்... தீர்வும்! | மருத்துவர் கு. சிவராமன்

உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது. ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன எனக் கூறும் மருத்துவர் கு.சிவராமன், தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்களையும், சித்த மருத்துவ தீர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார்.

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்...

6-7 மணி நேரமாவது தடையில்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது...

ஷிஃப்ட் முறை வேலையால் சீரான நேரத்தில் தூங்க இயலாமல் நேரம் தவறித் தூங்கும்போது...

காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது...

மருத்துவர் சிவராமன்

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது...

ஒத்துக்கொள்ளாத சென்ட்டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது...

பெட்டிக்கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் குளிர்கண்ணாடிகளை குஷியாக வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது...

தலைவலி தவிர்க்க சித்த மருத்துவ தீர்வுகள்...

மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதிகம். இதற்கு மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய `நீர்க்கோவை ’ மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால் தலைவலி காணாமல் போகும்.

அதோடு, நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகுக் கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும்.

சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சீந்தில் சூரணம் முதலான ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. சீந்தில் கொடியை ' சித்த மருத்துவத்தின் மகுடம்' எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகத்தை வீங்க வைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

தலைவலி

சைனசைட்டிஸோ, மைக்ரேன் தலைவலியோ... வாரம் இருமுறை சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், வலி மெள்ள மெள்ள மறையும்.

மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. இந்த வலி வராமலிருக்க, இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டி மருத்துவம் இருக்கிறது. இஞ்சியை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல். இஞ்சி, சீரகம், இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை டீஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்.

மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹை ட்ரேஸ் (High Trace) மினரல்ஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை' எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருள்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் வேண்டும்.

அஜீரணத் தலைவலி மற்றும் இரவெல்லாம் 'மப்பேறி' மறுநாள் வரும் ஹேங் ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து, தலைவலி போகும்.



from Vikatan Latest news https://ift.tt/NVoLZp2

Post a Comment

0 Comments