ஜப்பான் அரசாங்கம், தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் பெண்கள் கிராமப்புறத்தில் வசிக்கும் ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால் 6,00,000 யென்கள் (ரூ.3.5 லட்சம்) தருவதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
ஜப்பானில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் டோக்கியோ தொடர்ந்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவருகிறது.
ஜப்பான் மக்கள் அனைத்து பகுதிகளிலும் பரவி வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதற்காக பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜப்பானின் 23 வார்டுகளைச் சேர்ந்த சிங்கிள் பெண்களும் மக்கள் தொகை அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள ஆண்களை திருமணம் செய்துகொண்டு இடம்பெயர்ந்தால் 6,00,000 யென்கள் தருவதாக அறிவித்தனர் என்கிறது ஜப்பான் டுடே செய்திதளம்.
ஆனால் அவர்கள் எந்தெந்த பகுதிகளுக்குச் செல்லும்போது இந்த சலுகையைப் பெற முடியும் என்பதை இறுதிசெய்யவில்லை. அதற்குள் இந்த திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், பின்வாங்கியது அரசாங்கம்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஜப்பானின் பிற பகுதிகளில் இருந்து டோக்கியோவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 16% உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் பல்லாயிரணக்கணக்கானோர் டோக்கியோவுக்கு படையெடுக்கின்றனர்.
2023-ம் ஆண்டு டோக்கியோவிலிருந்து வெளியேறியவர்களை விட 68,000 பேர் அதிகமாக டோக்கியோவிற்கு வந்திருக்கின்றனர்.
டோக்கியோ மட்டுமல்ல அதன் அருகில் உள்ள சைதமா, சிபா, கங்கவா போன்ற சிறிய நகரங்களிலும் ஒகாசா போன்ற பிற பெரிய நகரங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஜப்பான் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக (பெரும்பாலும் வசதியான வாழ்க்கை முறைக்காக) கிரமப்புறத்தில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இதனால் ஜப்பானின் கிராமப்புற பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல சமூகங்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆண்களை விட பெண்களே நல்ல கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக பெரிய நகரங்களுக்கு அதிகமாக இடம்பெய்கின்றனர்.
இதற்காக ஏற்கெனவே டோக்கியோவில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது ஜப்பான் அரசு.
ஜப்பான் அரசின் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு!
எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசை, போக்குவரத்து நெரிசல், இரைச்சல் என கூட்டமான டோக்கியோ நகரம் ஒருபுறம், காலியான வீடுகள், மூடப்படும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என வெறுமையடையும் கிராமப்புறங்கள் மறுபுறம். இரண்டு உலகங்களாக பிரிந்திருக்கிறது ஜப்பான்.
ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதமும் சரமாரியாக குறைந்திருக்கிறது. ஜப்பான் வரலாற்றில் மிகக் குறைந்த அளவில் குழந்தைகள் பிறந்திருப்பது இந்த ஆண்டுதான் என்கின்றனர்.
திருமணம் நடைபெறும் விகிதமும் குறைந்திருக்கிறது. கடந்த 90 ஆண்டுகளில் மிகக் குறைவாக கடந்த ஆண்டு 5 லட்சம் திருமணங்கள் மட்டுமே நடந்திருக்கிறது.
ஜப்பான் இளைஞர்கள் ரிஸ்க் எடுக்க அஞ்சுவதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். வாழ்க்கைச் சுமைகளுக்கு தயங்குவதால் திருமணம் நடைபெறுவதும் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆசையும் குறைந்துள்ளது என்கின்றனர்.
மக்கள்தொகை நெருக்கடி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு 2019 முதல் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி முன்மொழியப்பட்டதுதான் கிராமப்புறங்களில் திருமணம் செய்து குடியேறும் பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம்.
ஆனால், "நல்ல வாழ்க்கைமுறையைத் தேடி டோக்கியோவுக்கு வரும் பெண்கள், மீண்டும் கிரமங்களுக்கே செல்ல வேண்டும் என அரசாங்கம் நினைப்பது, வருத்தத்துக்குரியது" என மக்கள் எதிர்த்ததால், இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜப்பான் மட்டுமல்லாமல் சீனா, செர்பியா, இத்தாலி போன்ற நாடுகளும் மக்கள்தொகை நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
from Vikatan Latest news https://ift.tt/wXWzlns
0 Comments