ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
ஈரோடு கிழக்கு காங்கிரஸின் தொகுதி என்பதால் காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை எனவும், முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திமுக ஈரோடு கிழக்கில் போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.' எனக் கூறியிருக்கிறார்.
from Vikatan Latest news https://ift.tt/jVJYbqR
0 Comments