கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க
“ ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல்வாதியான தம்பி விஜய்யின் சிறுபிள்ளைத்தனமான கருத்துதான் இது. இதில் அவரது அரசியல் தெளிவின்மைதான் அப்பட்டமாகத் தெரிகிறது. பா.ஜ.க-வின் செயல் தலைவராகச் செயல்பட்டுவரும் ஆளுநர், தமிழர்களுக்கு எதிராக விஷமக் கருத்துகளைத் தொடர்ந்து பரப்பிவருகிறார். மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களைக் காலவரையறையின்றி கிடப்பில் போட்டு, அரசுக்குக் குடைச்சல் கொடுக்கிறார். ஒன்றிய பா.ஜ.க அரசின் புள்ளிவிவரங்கள் அனைத்துமே தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதைச் சொல்கின்றன. ஆனால், இந்த ஆட்சியின் சிறப்பை ஒப்புக்கொள்ள மனமின்றி, தனது உரையைக்கூடப் படிக்காமல், திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்தி சட்டமன்ற அவையிலிருந்து வெளியேறுகிறார் ஆளுநர். இதுபோலத் தொடர்ந்து தனது பதவிக்கு ஒவ்வாத அரசியலைச் செய்துவரும் ஆளுநரைக் கண்டிக்காமல், போகிற போக்கில் இரண்டும் கெட்டான்போலக் கருத்து சொல்வது தம்பி விஜய்க்கு அழகல்ல. அரசியல்ரீதியாகக் கருத்து சொல்லும்போது எது சரி, எது தவறு என்று நேர்மையாகச் சொல்ல, ஓர் ஆன்ம பலம் வேண்டும். அது தம்பி விஜய்க்கு இருக்கிறதா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!”
வீர விக்னேஷ்வரன், செய்தித் தொடர்பாளர், த.வெ.க
“தலைவர் விஜய் பேச்சு உண்மைதானே... பொன்விழா கண்ட தமிழக சட்டமன்றத்துக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அதைக் குலைக்கும்விதமாக ஆளுநர் நடந்துகொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தேர்வுசெய்த அமைச்சரவை அனுப்பிய கோப்புகளைக் கிடப்பில் போட்ட ஆளுநரின் செயல்பாடுகள் எப்படிக் கண்டிக்கத்தக்கவையோ, அதேபோல, தி.மு.க-வின் செயல்பாடுகளும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையே. ஆனால், ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இது போன்ற காரணங்களால் தொடர்ந்து நடக்கும் உரசல், மோதல்களால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை... இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதைத்தான் எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதோடு, நாங்கள் அரசியலுக்குள் நுழையும்போதே பா.ஜ.க எங்களின் கொள்கை எதிரி, தி.மு.க எங்கள் அரசியல் எதிரி என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டோம். பா.ஜ.க மட்டுமல்ல, மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகக் கண்டிக்கும் தைரியமும் எங்களுக்கு உண்டு. நாடக அரசியல் செய்துகொண்டிருக்கும் தி.மு.க., அதை விட்டுவிட்டு இனியாவது மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 2026-ல் அது அவர்களுக்கே புரிந்துவிடும்!”
from Vikatan Latest news https://ift.tt/J1IRkhY
0 Comments