`மேட்ரிமோனியலில் பெண் தேடிய இளைஞரிடம் ரூ.28 லட்சம் மோசடி' - எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

சினிமா துறையில் பணிபுரிந்து வரும் வேலூரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர், மேட்ரிமோனியல் இணைய தளம் ஒன்றில் தனது சுயவிவரத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் அறிமுகமான பெண் ஒருவர் தனது திருமண விருப்பத்தை தெரிவித்து பேசி வந்திருக்கிறார். பெண்ணின் கவர்ச்சிகரமான புரொஃபைலைப் பார்த்து சினிமா துறையைச் சேர்ந்த அந்த இளைஞர் அசந்துபோனார்.

``இல்லற வாழ்க்கைத் தொடர நிறைய பணம் வேண்டும். அதற்கு தன்னிடம் சூப்பரான ஒரு வழி இருக்கிறது. அது தான் `கிரிப்டோ கரன்சி டிரேடிங்’. இதில், முதலீடு செய்தால் பணத்தை அள்ளிவிடலாம்’’ என்று கதை அளந்து வலை விரித்திருக்கிறார் அந்தப் பெண்.

மேட்ரிமோனியலில் கிரிப்டோ மோசடி (சித்திரிக்கப்பட்ட படம்)

வருங்கால மனைவி தானே என்று முழுவதும் நம்பிய இளைஞருக்கு `ஆக்ஸ்கேட்டன்ஸ்’ (OXGATENS) என்ற பெயரில் ஒரு மோசடி லிங்க்கை அனுப்பியிருக்கிறார் அந்தப் பெண். லிங்க்கை டவுன் லோடு செய்து கிளிக் செய்த இளைஞர், அதில் காண்பிக்கப்பட்ட யுபிஐ ஐடி வங்கிக் கணக்குகளில் பல்வேறு தவணைகளாக ரூ.28.51 லட்சம் பணத்தை செலுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, அந்த மோசடியான அப்ளிகேஷனிலேயே டெபாசிட் தொகையுடன் கமிஷன் தொகையும் சேர்த்து காட்டியிருக்கிறது. பணத்தை எடுக்க முயன்றபோது, இன்னும் அதிக பணத்தை முதலீடு செய்தால் தான் மொத்த பணத்தையுமே எடுக்க முடியும் என அறிவிப்பு (notification) காட்டியிருக்கிறது.

அதன் பிறகே இளைஞருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. பல்வேறு வகையில் விசாரித்த அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக பேசிய பெண்ணின் சுயவிவரங்கள் அடங்கிய மேட்ரிமோனியல் புரொஃபைல் `போலி’ எனத் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல், `கிரிப்டோ மோசடி’ கும்பலைச் சேர்ந்தவர்களிடம் பணத்தை இழந்துவிட்டதும் தெரியவந்ததால், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார் சினிமா துறையைச் சேர்ந்த அந்த இளைஞர்.

கிரிப்டோ மோசடி

இதையடுத்து, www.cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் போர்ட்டலில் தனது புகாரை பதிவு செய்தார். புகாரின்பேரில், வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணன் உத்தரவின்படி வேலூர் மாவட்ட சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

கடைசி வரை தன்னை ஏமாற்றிய அந்தப் பெண் யார் என்று கூடத் தெரியவில்லையே என்பது தான் பணத்தை இழந்த சினிமா துறையைச் சேர்ந்த அந்த இளைஞர் படும் வேதனை. ``இது போன்று பொதுமக்கள் யாரும் வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களில் முதலீடு, வீட்டிலிருந்தே வேலை ( share market investment, online part time job, work from home jobs ) சம்பந்தமாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்’’ என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news https://ift.tt/clpWQV6

Post a Comment

0 Comments