வேலூர்: ``NSG கமாண்டோக்கள் ஒத்திகை பயிற்சி... தவறாக பகிரக் கூடாது'' - எச்சரிக்கும் காவல்துறை

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்துக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு காரில் உள்ளே சென்று... திடீர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதைப் போன்ற தவறான தகவல்களை சிலர் பதிவிட்டு, இரண்டொரு வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோக்கள் தொடர்பான உண்மைத்தன்மை அறியாமல், பலரும் பலவாறாக கேள்விகளையெழுப்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது, `பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை’ பயிற்சி தான்.

பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை பயிற்சி

முகமூடி அணிந்திருந்த நபர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. என்.எஸ்.ஜி (National Security Guard) எனும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள். அதாவது, கருப்புப் பூனைகள் என்றழைக்கப்படும், இந்தியாவின் உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள். மார்ச் 2-ம் தேதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கமாண்டன்ட் சந்தீப்குமார் தலைமையில் 104 என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் பங்கேற்றனர்.

இவர்களுடன் தமிழ்நாடு கமாண்டோ பிரிவின் எஸ்.பி அருண் பாலகோபாலன் தலைமையின்கீழ் 57 வீரர்கள் மற்றும் வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணன் தலைமையிலான போலீஸாரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 6.40 மணி வரை இந்த கூட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்று முடிந்தது. இது தொடர்பாக வேலூர் மாவட்டக் காவல்துறை தரப்பில் இருந்தும் விரிவான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதோடு, பத்திரிகை, ஊடகங்களிலும் தெளிவான செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.

சமூக வலைதள பதிவுகள்

அப்படியிருந்தும், பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியிலும், உள்ளேயும் வேடிக்கை பார்க்க நின்றிருந்த சிலர் செல்போன்களில் வீடியோக்களை எடுத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது ஒரு வகையில், சமூக பதற்றத்துக்கும் வழி வகுக்கிறது. தேசப் பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைப் பயிற்சியை தவறான நோக்கத்துடன் பரப்புவது கடுமையான குற்றம் என எச்சரிக்கை விடுத்திருக்கும் போலீஸார், மேற்கொண்டு பகிரக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news https://ift.tt/QZaByhn

Post a Comment

0 Comments