சத்தியமூர்த்தி பவனில், வடக்கு நோக்கிய படையெடுப்பு இப்போது சீசன்போல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்கச் சொல்லி, 15 மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துத் திரும்பிய நிலையில், கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக, கோவாவுக்குப் படையெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள் அவரின் எதிர்ப்பாளர்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான், ‘மயூராவைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் இந்த கோவா படையெடுப்பு, கதர்களிடம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. என்னதான் நடக்கிறது சத்தியமூர்த்தி பவனில்..?

கோவாவுக்குப் படையெடுத்த ஐந்து பேர்!
நம்மிடம் பேசிய காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சிலர், “கட்சியின் தேசியப் பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால், கடந்த ஆண்டு, நவம்பர் 17-ம் தேதி டெல்லிக்குச் செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு வந்தார். கட்சி சீனியர்கள், நிர்வாகிகள் பலரும் அவரை வழியனுப்புவதற்காக வந்திருந்தனர். அந்தச் சமயத்தில்தான், தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அது குறித்து, ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர் கோவை செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் வேணுகோபாலிடம் விளக்கினர். மயூரா ஜெயக்குமார் மீது ஏகப்பட்ட புகார்களையும் வாசித்தனர். கடுப்பான மயூரா ஜெயக்குமார், விமான நிலையத்தின் வாசலில்வைத்தே கோவை செல்வம் தரப்பினருக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆபாசமாகவும் திட்டி, அடிக்கவும் பாய்ந்தார். இந்தக் களேபரம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது.
அதைத் தொடர்ந்து, கோவை செல்வம் அளித்த புகாரில் மயூரா ஜெயக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்தது கோவை போலீஸ். இந்த விவகாரம் சீரியஸாகிக்கொண்டே போகவும் உரிய விசாரணை நடத்தி அறிக்கையளிக்க, ஜோதிமணி, சுதா, கோபிநாத், ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவை அமைத்தது டெல்லி. இந்தக் குழுவின் விசாரணைக்கு ஆஜராகாமல், ‘கட்சி விதிப்படி, தேசிய ஒழுங்கு கமிட்டிதான் ஜெயக்குமாரை விசாரிக்க முடியும். மாநில ஒழுங்கு கமிட்டிக்கு அந்த அதிகாரமில்லை’ என ஜெயக்குமார் தரப்பினர் வாதாடினர். இதையெல்லாம் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசென்ற ஐவர் குழு, மயூரா ஜெயக்குமார் மீதே குற்றச்சாட்டை வைத்தது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக உருண்டு கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில், சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடன்கர். விசாரணைக்கு ஆஜராக, காங்கிரஸ் நிர்வாகிகளான செளந்தரகுமார், சரவணகுமார், பழையூர் செல்வராஜ், கோவை செல்வம், சோபனா செல்வம் ஆகியோர் கோவாவுக்குப் பயணப்பட்டார்கள். கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஜோடன்கரை அவரது கோவா இல்லத்தில் சந்தித்தவர்கள், பெரிய புகார்ப் பட்டியல் ஒன்றையும் வாசித்திருக்கிறார்கள்.

“கட்சியே அழிஞ்சுபோயிடும்..!”
‘நம் கட்சியில் கோவை முன்னாள் மாவட்டத் தலைவராக இருந்த தளபதி முருகேசன், மயூரா ஜெயக்குமாரின் தொல்லை தாங்க முடியாமல்தான் தி.மு.க-வுக்குத் தாவினார். அந்தக் கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு, முருகேசனுக்குத் தரப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியான தினேஷ், சர்க்கிள் தலைவர்களான கர்ணன், விஜயகுமார், ஜி.ஆர்.சீனிவாசன், வட்டாரத் தலைவர் நடராஜன், தொழிற்சங்கத் தலைவர் துரை என மயூரா ஜெயக்குமாரின் உள்ளடி வேலையால் கட்சியிலிருந்தே விலகியவர்கள் ஏராளம். டெல்லியிலுள்ள சிலரின் அனுக்கிரகம் இருப்பதால், ஜெயக்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இனியும் மெளனமாக இருந்தால், கட்சியே அழிந்துபோய்விடும்’ எனக் குமுறியிருக்கிறது அந்த ஐவர் படை.
வந்தவர்களின் குறைகளை அமைதியாகக் கேட்டுக்கொண்ட கிரிஸ் ஜோடன்கர், ‘தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குக் கட்சியில் இடமிருக்காது’ எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். மார்ச் மாதத்துக்குள் மாவட்ட கமிட்டிகளைக் கலைத்துவிட்டு, புதிதாக நிர்வாகிகளை நியமிக்கத் தயாராகிறது டெல்லி மேலிடம். அதற்காக, அமைப்புரீதியாக இருக்கும் 78 மாவட்டங்களிலும், மாவட்டத்துக்கு மூன்று பெயர்களைச் சிபாரிசு செய்யச் சொல்லி செல்வப்பெருந்தகைக்கு உத்தரவிட்டிருக்கிறது. செல்வப்பெருந்தகை மீதான 15 மாவட்டத் தலைவர்களின் புகார்களை டெல்லி மேலிடம் ஏற்காததால்தான், அவரிடமே பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். மாவட்ட கமிட்டி, மாநில நிர்வாகிகளில் மாற்றங்கள் நிகழும்போது, மயூரா ஜெயகுமார் விவகாரத்திலும் முடிவுகள் எடுக்கப்படலாம்” என்றனர் விரிவாகவே.
இதற்கிடையே, “மாவட்டத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் மயூராவுக்கு எதிராகத் தீர்மானம் போடுகிறார்கள். அவர்மீது எள்ளளவும் தவறில்லை. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக இருந்தபோது, சஸ்பெண்ட் ஆனவர்தான் கோவை செல்வம். அவருடைய புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என டெல்லிக்கு அடுத்த காவடி தூக்கத் தயாராகிறது மயூரா ஜெயக்குமார் தரப்பு.
மீண்டும் கோஷ்டிச் சண்டைகளின் மைதானமாக மாறத் தொடங்கியிருக்கிறது சத்தியமூர்த்தி பவன்!
from Vikatan Latest news https://ift.tt/RhkDbyY
0 Comments