மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ஆமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்'. 2007-ல் ஆமீர் கானின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அப்படம் ஏற்படுத்தியது போன்ற தாக்கத்தையும் விழிப்புணர்வையும் இப்படத்தின் கதையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2கே கிட்ஸ் பலரும் தங்களுடைய வளரும் பருவ நாட்களில் நிச்சயமாக இந்தப் படத்தைக் கடந்து வந்திருப்பார்கள்.
சொல்லப்போனால், அப்போது இந்தத் திரைப்படம் படிக்கும் மாணவர்கள் பலருக்கு ஏற்படுத்திய தாக்கம்தான் இன்றுவரை அவர்களுக்கு 'தாரே ஜமீன் பர்' படைப்பு ஃபேவரைட்டாக இருப்பதற்கு முக்கியக் காரணம்.
இந்த 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை எதிர்பார்ப்புடன் காணக் காத்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். இன்றுவரை பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் 'தாரே ஜமீன் பர்' படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போமா...
81-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக இத்திரைப்படம் அப்போது அனுப்பப்பட்டது. 55-வது தேசிய விருது விழாவில் மூன்று தேசிய விருதுகளை இத்திரைப்படம் அப்போது பெற்றது.
இத்திரைப்படத்திற்கு முதல் முக்கியப் புள்ளி பிரபல இயக்குநர் அகிரா குரோசாவாதான். ஆம், குரோசாவும் பள்ளியில் படிக்கும்போது பெரிதளவில் படிப்பில் சோபிக்கவில்லை. அவருடைய வாழ்க்கையில் வந்த ஒரு ஆசிரியர்தான் அவரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்.
இப்படி ஒரு ஆசிரியர் ஒரு மாணவனின் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்திற்கு அழைத்துச் செல்லும் லைனை வைத்துதான் இந்தப் படத்தின் கதையை விரித்திருக்கிறார்கள் படத்தின் திரைக்கதையாசிரியர்கள் அமோல் குப்தே மற்றும் தீபா பாடியா.
அவர்களும் பேட்டிகளில் இந்தப் படைப்பிற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது குரோசாவாதான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு டிஸ்லெக்ஸியாவைப் படம் பேசும் மையக் கருவாக எடுத்துக்கொண்டனர்.
அதற்காக டிஸ்லெக்ஸியா குறைபாடு உடைய பல மாணவர்களைச் சந்தித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்படியான வழியில்தான் படத்தின் கதையும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. ஆமீர் கானும் திரைக்கதையாசிரியர் அமோல் குப்தேவும் ஒரு கல்லூரியில் சந்தித்துக்கொண்டப் பிறகு இந்தக் கதை திரைப்படமானது. முதலில் இந்தப் படத்தை அமோல் குப்தேதான் இயக்கியிருக்கிறார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய முதல் வாரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் ஆமீர் கானுக்கு திருப்திகரமாக இல்லை. அவருக்கு அவையெல்லாம் அதிருப்தியாகவே இருந்திருக்கின்றன. அழகாக எழுதப்பட்ட காட்சிகளை டைரக்ஷன் மூலமாக முழுமையான படைப்பாக அமோல் குப்தேவால் திரையில் கொண்டுவர முடியவில்லை என ஆமீர் கான் அவரே படத்தை எடுக்க முடிவு செய்தார்.
பிறகு, இப்படத்தில் நடிப்பதோடு இயக்குநராகவும் படத்தில் களமிறங்கினார். இப்படி நடிப்பு, இயக்கம் என இரண்டையும் கையாண்டது அப்போது அவருக்கு சவாலாக இருந்ததாகவும் அப்போதைய பேட்டிகளில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆமீர் கான் படப்பிடிப்பைத் தொடங்கியப் பிறகு அவருக்கு உறுதுணையாகப் படப்பிடிப்பில் பங்கேற்றும் இருக்கிறார் அமோல் குப்தே.
படத்தின் களம் பள்ளி, அங்கு படிக்கும் மாணவர்கள் என நகர்வதால் உண்மையான பள்ளி மாணவர்களை வைத்தே இப்படம் முழுவதையும் எடுத்திருக்கிறார் ஆமீர் கான்.
படப்பிடிப்பு சமயத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரையும் அக்கறையாகக் கவனித்தும் இருக்கிறார் ஆமீர் கான். படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றப் பிறகு படத்தின் வெற்றியைப் பள்ளி மாணவர்களுக்கு சமர்ப்பித்தார் ஆமீர் கான்.
இந்தப் படத்தைப் பள்ளி மாணவர்களிடம் கொண்டுச் சேர்ப்பதற்கு பல முயற்சிகளையும் அப்போது எடுத்திருக்கிறார். டிஸ்லெக்ஸியா என்ற குறைபாடு குறித்து முழுமையாக அறியாமல் இருந்தவர்களுக்கு இந்தப் படம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாடமும் புகட்டியது.
சொல்லப்போனால், இந்தத் திரைப்படம் வெளியான சமயத்தில் பல சர்வதேச டிஸ்லெக்ஸியா அமைப்புகளும் இந்தப் படத்திற்கு பாராட்டுகளைக் கொடுத்து அங்கீகரித்தன. இந்தத் திரைப்படம் 81-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக அனுப்பப்பட்டது.
ஆனால், இது அப்போது ஆஸ்கர் விருதின் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை. படம் பெரும் வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டப் பிறகும் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்தப் படம் ஆஸ்கருக்கு நாமினேட் ஆகாத சமயத்தில் பல ஊடகங்களும் இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது ஏன் கிடைப்பதில்லை எனப் பேசினர்.
தன்னுடைய படம் ஆஸ்கருக்கு செல்லவில்லை என்கிற வருத்தம் ஆமீர் கானுக்கு துளியும் இல்லை. முக்கியமாக, இந்த விஷயத்தில் அப்போது, "நான் மக்களுக்காகதான் படம் எடுக்கிறேன். விருதுகளுக்காக எடுக்கவில்லை!" என முதிர்ச்சியான பதில் ஒன்றையும் கொடுத்திருந்தார்.
'தாரே ஜமீன் பர்' படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களைக் கமெண்டில் பதிவிடுங்கள்.
from Vikatan Latest news https://ift.tt/hVgSmJN
0 Comments