தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டியைச் சேர்ந்த சுனீல்குமார், கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முருகன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 26-ம் தேதி இரவு சுனீல்குமார் தனது மோட்டார் சைக்கிளில் முருகனுடன் பாலக்கோடு நோக்கி பயணம் செய்தபோது, சின்னார்த்தள்ளி குட்டிரோடு அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார், இருவரின் உடலையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி, சொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் பாலக்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவப்படுகொலை என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
உயிரிழந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளை காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவிகளின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், மாணவிகளின் உறவினர்கள் சுனீல்குமார் மற்றும் முருகன் இருவரையும் “கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் “இது விபத்து அல்ல… திட்டமிட்டு செய்யப்பட்ட ஆணவப்படுகொலை” எனவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறியதால், காவல் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.
பாலக்கோடு டிஎஸ்பி ராஜசுந்தர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாலக்கோடு காவல்துறையினர் “இது ஆணவப்படுகொலையா அல்லது விபத்தா?” என்ற இரு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/MfkmbnK
0 Comments