சில தினங்களுக்கு முன்னால் கல்லீரல் அழற்சி நோய் முற்றி நடிகர் அபிநய் உயிரிழந்தார். அவருக்காக வருத்தப்படுகிற அதே நேரம், கல்லீரலில் எந்தெந்த காரணங்களால் பிரச்னைகள் ஏற்படுகின்றன; வராமல் தடுப்பது எப்படி; வந்த பிறகு என்ன செய்வது என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.
''இருபது வருடங்களுக்கு முன்பு, கல்லீரல் நோய் என்று ஒருவர் வந்தால் அவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால்தான் அவருக்கு கல்லீரல் நோய் வந்திருக்கிறது என்போம். ஆனால், இப்போது கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு, மது மட்டுமல்ல... அதிக மாவுச்சத்தும், இனிப்பும், உடல் உழைப்பின்மையும், உறக்கமின்மையும், மன அமைதியின்மையும்கூட காரணங்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஃபேட்டி லிவரில், ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர், வளர்சிதை மாற்ற காரணிகளால் ஏற்படும் ஃபேட்டி லிவர் (MASLD அல்லது Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease) என 2 வகைகள் இருக்கின்றன.
பெரும்பாலும் 40-களில் கண்டறியப்பட்ட இந்த நோய் இப்போது 30-களில், ஏன் 20-களில்கூட வர ஆரம்பித்துவிட்டது. வேறு ஏதோ பிரச்னைக்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும்போது தற்செயலாகத்தான் ஃபேட்டி லிவர் கண்டுபிடிக்கப்படுகிறது என்றாலும், அதுவொரு மிகப்பெரிய பிரச்னை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொதுவாக கல்லீரல் என்பது, அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்கிற அளவுக்கு வலிமையான ஓர் உறுப்பு. அதையே அசைத்துப்பார்க்கக்கூடியது ஃபேட்டி லிவர் பிரச்னை.
நம் உடலில் மாவுச்சத்து தேவைக்கு இருந்தால், உடல் அதை தன் சக்திக்கு ஏற்ப எடுத்துக்கொண்டு விடும். இதுவே தேவைக்கு அதிகமாக இருந்தால், கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி வயிற்றில், தொடையில், இடுப்பில், மார்புப் பகுதிகளில் சேமித்து வைக்கும். ஆனால், தொடர்ந்து மாவுச்சத்து உடலில் சேர்ந்துகொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அது கல்லீரலில் கொழுப்பாகப் படிய ஆரம்பிக்கும். ஆக, ஃபேட்டி லிவருக்குக் காரணம் அதிக மாவுச்சத்துதான். கொழுப்பு அல்ல அதனால், ஃபேட்டி லிவர் கிரேடு ஒன் என ரிப்போர்ட் வந்தவுடனே, அசைவ உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அரிசி, கோதுமை, மைதா என்று சாப்பிட ஆரம்பித்தால், பிரச்னை குறையாது; அதிகமாகவே செய்யும்.
ஃபேட்டி லிவர் பிரச்னையில் 3 கிரேடு இருக்கின்றன. கிரேடு ஒன்றில், கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்துக் காணப்படும். கிரேடு இரண்டில், கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிரை (portal vein) சரியாக புலப்படாமல் போகும். கிரேடு மூன்றில், கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால், உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் இப்படி கிரேடிங் செய்யப்படுவது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடுகிறது என்பதால், கிரேடு 2 என பரிசோதனை முடிவு வந்தவுடனேயே ஃபைப்ரோ ஸ்கேன் (Fibro Scan) செய்து கல்லீரல் பாதிப்பை துல்லியமாக தெரிந்துகொள்வது நல்லது.
மதுவினால் ஏற்பட்ட ஃபேட்டி லிவர் என்றாலும் சரி, மது அருந்தாதவர்களுக்கு வருகிற ஃபேட்டி லிவர் (Non-alcoholic steatohepatitis) என்றாலும் சரி, கல்லீரல் செல்கள் தொடர்ந்து இடர்பாட்டுக்கு உள்ளாகி மரணமடைந்து தழும்புகளாக மாறிவிடும். இது ஒருகட்டத்தில் சரி செய்ய முடியாத நிலையை அடைந்து, கல்லீரல் சுருங்க ஆரம்பித்து விடும். இதுதான் கல்லீரல் அழற்சி நோய் (Cirrhosis) எனப்படும். இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்பு வரை இட்டுச்செல்லும் ஆபத்தும் இருக்கிறது.
வெளிநாடுகளில், பள்ளி மாணவர்களுக்கு ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ், சாக்லெட், கேக் என பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம். இங்கும் பரிசோதனை செய்தால், ஒருவேளை நம் மாணவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கலாம்.
* ஃபேட்டி லிவர் பிரச்னையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
* மாவுச் சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிட்டதுதான் பிரச்னைக்குக் காரணம் என்பதால், அதை பாதியாக குறைக்க வேண்டும். இனிப்பு சுவை தரும் அனைத்து உணவுகளையும், பண்டங்களையும் நிறுத்திவிட்டு, லோ கார்ப்ஸ், தேவையான புரதம் மற்றும் நல்ல கொழுப்பு உணவு முறைக்கு மாற வேண்டும்.
* மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும். உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக் கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து விடும்.
* நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடுவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உதவும்.
லிவர் சிரோசிஸ் அல்லது முற்றிய ஃபேட்டி லிவர் இருப்பவர்கள், குடல் மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு நிபுணரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். ஏனென்றால், லிவர் சிரோசிஸ் ஏற்பட்டால், வயிற்றுப்பகுதியில் நீர் கோத்து வயிறு வீங்கும், உடல் மெலிந்து போகும், உணவுக்குழாயில் உள்ள ரத்த நாளங்களில் புடைப்பு ஏற்படுத்திப் பின்னாளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகலாம். தவிர, எதிர்ப்புச்சக்தி குறைபாட்டால் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படலாம். சிலருக்கு மஞ்சள் காமாலையும் ஏற்படலாம்.
* லிவர் சிரோசிஸ் பிரச்னை வந்தால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உதவும்.
* இறந்த கொடையாளரிடம் இருந்து எடுத்து வைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை, உயிருள்ள உறவினரிடம் இருந்து கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து வைப்பது இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன.
* கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு, வயிற்றில் சுரக்கும் நீரை வெளியேற்றுதல், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்து ரத்த நாள வெடிப்புகளுக்கு சுருக்கு முடிச்சுப் போடுதல், கல்லீரலுக்கு உகந்த மருந்துகளை உண்ணுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
லிவர் சிரோசிஸ் வந்தால் மரணம் என்று எண்ணிவிட வேண்டாம். சரியான வாழ்க்கை முறை, முறையான சிகிச்சைகள் மூலம் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முடியும். ஆனால், வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு, நீங்கள் மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டொழிக்க வேண்டும். குப்பை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கூடவே, தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி, எட்டு மணி நேர உறக்கம், மன அமைதி ஆகியவையும் முக்கியம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
from Vikatan Latest news https://ift.tt/Hhxyr7b
0 Comments