Vaaheesan: "மத ரீதியான பாட்டு பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுனாங்க" - வாகீசன் பேட்டி

வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர்.

சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது, முருகனைப் பற்றிய ஆன்மிகப் பாடலை ராப் வடிவில் கொண்டு வந்திருக்கிறார் வாகீசன். அந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

வாகீசன்
வாகீசன்

பேசத் தொடங்கிய வாகீசன், "வணக்கம்! தமிழ் மக்களுடைய அன்புக்கு முதல் நன்றி. இப்படியான அன்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

சுயாதீனமாக பாடணும்னு ஆசை உள்ளுக்குள்ள இருந்தது. இலங்கையில போர் சூழல் காரணமாக சினிமாவும் பின்தங்கிதான் இருந்தது.

அங்கிருந்து சுயாதீனமாக இயங்கி இன்னைக்கு இங்க வந்திருக்கேன். நடிப்புப் பக்கம் வருவேன்னு நான் துளியும் நினைச்சுப் பார்க்கல.

எனக்கு கனெக்ட்டா இருக்கிற இடத்துலதான் நான் வேலை பார்ப்பேன். எந்தவொரு இடத்துல நல்ல விஷயங்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் இருக்கோ, அங்கதான் நானும் இருப்பேன்.

அங்கதான் எனக்கு சௌகரியம் உருவாகும். இப்படியான விஷயங்களால எனக்கு சில வாய்ப்புகளும் போயிருக்கு. இப்போ அடுத்தடுத்து பாடல்கள் செய்துவிட்டு இருக்கேன். இனி தீபாவளி பட்டாசு மாதிரி ஒவ்வொன்றாக வெளியில் வரும். அது நமத்துப் போகாமல் வெடிக்கணும்." எனச் சிரித்தவர், "ஒரு வைரல் கிடைக்கும்போது ஒரு முழுமையான உணர்வு வந்துவிடக்கூடாது. அப்படி உங்களுக்கு தோன்றிவிட்டால் நீங்க விழுந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

எனக்கு ஹிட் கிடைச்ச சமயத்துல, இன்னும் அதைவிட பெருசா பண்ணணும்னுதான் யோசிப்பேன். வைரல், ஹிட்டெல்லாம் நிரந்திரம் கிடையாது. அது போதை மாதிரிதான். மக்கள் இப்படி ஒருத்தன் இருந்தான்னு பேசணும்.

அதை நோக்கமாக வச்சுக்கிட்டுதான் நான் வேலைகளை கவனிக்கிறேன். எனக்கு என்னுடைய வரிகளை தமிழில் எழுதுவதுதான் விருப்பம். ஆங்கிலத்துல வரிகள் எழுத பலரும் இருக்காங்க. தமிழில் எழுதுறதுக்கு நான்தான் இருக்கேன்!" என்றார்.

வாகீசன்
வாகீசன்

"சின்ன வயசுல நான் அதிகமாக பஜனை ஒலிதான் கேட்டு வளர்ந்திருக்கேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மாகூட நான் பூஜையில இருப்பேன். இப்படியான இசை கேட்டு வளர்ந்த நான் மிருதங்கமும் கத்துக்கிட்டேன். எனக்கு முருகன் மீது அதீத இஷ்டம்.

இப்போ முருகனுக்காக ஒரு ராப் பாடல் செய்திருக்கேன். ராப்ல ஒரு ஆன்மிகப் பாடல் பண்ணனும்ங்கிறதுதான் அதனுடைய ஐடியா. திடீர்னு ஒரு நாள் இதனுடைய ஐடியா வந்தது.

வெளிநாட்டுல ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன். போகும்போது ப்ளைட்லயே அந்தப் பாடலை எழுதிட்டேன். இந்த வந்ததும் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டேன்.

இந்த மாதிரியான முருகன் பாட்டு செய்யும்போது, 'உனக்கு அனைத்து மதத்தினரும் ரசிகர்களாக இருக்காங்க. அவங்களுக்கு இந்தப் பாடல் கனெக்ட் ஆகாது'ன்னு சொன்னாங்க.

நான் அனைத்து மதத்தையும் பெரிதும் மதிக்கிறேன். குறிப்பாக, எனக்கு இஸ்லாமிய மதத்தின் மீதும் பெரும் காதல் உண்டு. இந்தப் பாடலை ஆன்மிகப் பாடலாகக் கொண்டு வந்தை நான் மைனஸாக பார்க்கல.

நான் ராப் பாடத் தொடங்கின சமயத்திலேயே முருகன் பாடல்களை ராப் செய்து பழகியிருக்கேன். இலங்கையிலும் ராப்பர்ஸ் இருக்காங்க. அவங்கதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷனாகவும் இருந்திருக்காங்க. அதிலும் ரத்தி அதித்தன் படிக்கும் ராப் பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

வாகீசன்
வாகீசன்

இங்கு அறிவு, ஹிப் ஹாப் ஆதி எனக்கு இன்ஸ்பிரேஷன். அறிவு கான்சர்ட்டுக்காக இலங்கை வந்திருந்தப்போ நான் அவரை நேரில் போய் சந்திச்சேன்.

அப்போ, என்னுடைய வரிகளுக்கு அவர் ஃபேன்னு சொன்னாரு. அவரைப் பார்த்ததும் நான் சொல்லணும்னு நினைச்சிருந்த விஷயத்தை அவர் முந்தி வந்து என்கிட்ட சொல்லிட்டாரு.

அப்படி நான் வியந்த பார்த்த ராப்பர்கள், இன்னைக்கு சகோதரர்களாக மாறியிருக்காங்க. இந்தத் தருணத்துல என்னையும் ஒரு ராப்பராக மாற்றிய மக்களுக்கு நன்றி சொல்லணும்." என்றவர், " நான் இப்போ 'மைனர்' படத்துல நடிச்சுக்கிட்டு இருக்கேன். அந்தப் படத்துக்கு முன்னாடி நான் நடிச்சிருக்கிற இன்னொரு படம் வெளிவரலாம். அப்டேட்ஸ் சீக்கிரமே சொல்றேன்!" என சிரித்தபடி முடித்துக்கொண்டார்.



from Vikatan Latest news https://ift.tt/xSU9TV1

Post a Comment

0 Comments