Doctor Vikatan: தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி! - காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. சமீபத்தில்தான் திருமணமானது. எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த எனக்கு, அது கசப்பான அனுபவங்களையே கொடுத்திருக்கிறது. தாம்பத்திய உறவின்போது எனக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது. அது தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிறது. என்னால் உடலளவில் அதற்கு ஒத்துழைக்க முடியவில்லை. ஒருவேளை நான் இதில் விருப்பமின்றி, என் கணவரைத் தவிர்க்க இப்படிச் செய்கிறேனோ என அவருக்கு ஓர் எண்ணம் இருப்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட வலிக்கு என்ன காரணம்... இதற்குத் தீர்வுகள், சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலிக்கு, 'டிஸ்பெரூனியா' (Dyspareunia ) என்று பெயர். அதாவது தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஏற்படுகிற ஒருவித வலி.  இந்த வலியின் பின்னணியில் உளவியல் மற்றும் உடலியல் காரணங்கள் எதுவும் இருக்கலாம்.

தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம்.  குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம்.  அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம்.

தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். அதேபோல மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கும் வெஜைனாவில் வறட்சி ஏற்படுவது சகஜம்.

திருமண வாழ்க்கை (Representational Image)
எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும்.

ஹார்மோனல் இம்பேலன்ஸ் எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மையும் இதற்கு முக்கியமான காரணம். சில பெண்களுக்கு வெஜைனாவில் கசிவு இல்லாததாலும் வறட்சியும் தாம்பத்திய உறவின்போதான வலியும் இருக்கும். 

வெஜைனாவில் ஏற்படுகிற தொற்று, இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படுகிற தொற்று போன்றவை இருந்தாலும், அந்தப் பெண்களுக்கு தாம்பத்திய உறவின்போது வலி இருக்கும்.  எண்டோமெட்ரியோசிஸ் என்கிற பிரச்னை உள்ள பெண்களுக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும். கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதையே 'எண்டோமெட்ரியோசிஸ்'  என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது

அடுத்தது வெஜைனிஸ்மஸ் (vaginismus) என்ற பாதிப்பு. முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு  உடல் ஒத்துழைக்காது. வெஜைனா தசைகள் சுருங்கிக் கொள்ளும். இந்த விஷயத்தில் கணவரின் ஒத்துழைப்பும்,  அவர் தன் மனைவியைப் புரிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம்.  'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது, தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சம்பந்தப்பட்ட பெண் அதற்கு ஒத்துழைக்க மாட்டார். தவிர, ஃபைப்ராய்டு, சினைப்பை கட்டிகள் உள்ள நிலையில், மிகவும் தீவிரமான தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படலாம்.  மன அழுத்தமும் முக்கிய காரணம். 

இவை எல்லாவற்றுக்குமே தீர்வுகள் உண்டு. வெஜைனா வறட்சிக்கு, லூப்ரிகேஷன் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும். மெனோபாஸ் காலத்து வறட்சியால் ஏற்பட்ட பிரச்னைக்கு, ஈஸ்ட்ரோஜென் க்ரீம்கள் பரிந்துரைக்கப்படும்.  வெஜைனிஸ்மஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. இதற்கெல்லாம் முன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். தாம்பத்திய உறவின் போது வலியை உணர்வதாகச் சொன்னால், அந்தப் பெண்கள் பொய் சொல்வதாக நினைக்கக்கூடாது. அதற்கு கவனம் கொடுத்து மருத்துவரை அணுகினால், சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news https://ift.tt/FUi4usq

Post a Comment

0 Comments