Parenting: உங்க குழந்தை `I hate you'னு சொன்னா என்ன அர்த்தம்?

இந்த உலகில் அதிகம் கவனிக்கப்படாத வார்த்தைகள், குழந்தைகளின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். காரணம், எவ்வளவு சீரியஸாக குழந்தை நம்மிடம் ஒரு விஷயத்தைப் பேசவந்தாலும் அதற்குக் காதுகொடுக்காமல் சென்றுவிடுபவர்கள் பலர்.

அப்படியே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும், அதன் வீரியம் உணராமல், `குழந்தை ஏதோ சீரியல், சினிமாவைப் பாத்துட்டு பேசுதுபோல', 'ஏதோ தெரியாம இப்படிப் பேசியிருக்கும்' என்றே நம்மில் பலரும் அவர்களை நொடிகளில் கடந்துவிடுகிறோம். அவ்வளவு பரபரப்பு நமக்கு!

Parenting
Parenting

என்றாலும், சில வார்த்தைகளைக் குழந்தைகள் சொல்லக்கேட்கும்போது மட்டும், `இதை இவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா' என யோசிப்போம். அந்த அளவுக்கு வீரியமுள்ள வார்த்தைகளாக அவை இருக்கும்.

அப்படியானவைதான், `ஐ ஹேட் யூ' என்ற வார்த்தைகள். `ஹேட்', அதாவது வெறுப்பு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் குழந்தைகள் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், அவர்கள் அதைப் பேசுகிறார்கள் எனும்போது, கவனம் செலுத்தவேண்டிய விஷயம் அது.

குழந்தை 'ஐ ஹேட் யூ' எனச் சொன்னால், அதன் அர்த்தம் என்ன? குழந்தைக்கு நம்மீது ஏற்படும் வெறுப்பை எப்படி அணுகலாம்? சில யோசனைகள் சொல்கிறார், மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

* வயதுக்கேற்றபடி இதன் பொருள் மாறும். அந்த வகையில், பேச ஆரம்பித்த முதல் சில வருடங்களிலுள்ள குழந்தை எனில், குழந்தைக்கு விருப்பமான ஏதோவொரு பொருளை நீங்கள் கொடுக்கவில்லை என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

அது, குழந்தை விளையாடும் சிறுபொருளாகக்கூட இருக்கலாம். நீங்கள் தடாலடியாக அதைப் பறித்துக்கொண்டீர்கள் என்ற கோபத்தைத்தான், குழந்தை அப்படிக் குறிப்பிடும்.

இந்த வயதிலுள்ள குழந்தைகளுக்கு, உங்கள் வார்த்தையின் பின்னுள்ள நியாயத்தை தெளிவாகப் புரியவைக்க முடியாது என்றாலும், `ஐ ஹேட் யூ' என்பது தவறான வார்த்தைப் பிரயோகம் எனச் சொல்லிக்கொடுக்க முடியும். ஆகவே, பெற்றோர் தரப்பில் அதை முயலலாம்.

Parenting
Parenting

* சற்றே வளர்ந்த குழந்தை என்றால், அவர்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கு விஷயத்தை நீங்கள் செய்யவிடவில்லை என்பதால் அவர்கள் இப்படிப் பேசியிருக்கலாம்.

அந்தப் பொழுதுபோக்கு, குழந்தையின் நேரத்தை வீணடிக்கிறது என்பதால்கூட நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம். பிரச்னை என்னவெனில், உங்கள் நிராகரிப்புக்குப் பின்னாலுள்ள நியாயத்தைக் குழந்தைக்கு நீங்கள் புரியவைக்கவில்லை.

* டீன் ஏஜ் குழந்தை என்றால், அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவர்கள் செயல்பட நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், இப்படிப் பேசுவார்கள். அதற்காக, அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அமைதிகாக்க வேண்டும் என்றில்லை. தவறு இருப்பின், அதை முறையாக சுட்டிக்காட்டலாம். இருப்பினும், விஷயத்தைப் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

Parenting
Parenting

* பெரும்பாலான நேரங்களில், குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும் `ஐ ஹேட் யூ' என்பது, `ஐ மிஸ் யூ', `எனக்கு வேண்டியதை நீ கொடுக்கவில்லை', `எனக்குப் பிடிச்ச மாதிரி செயல்பட நீ அனுமதிக்கவில்லை' போன்ற வருத்தத்தின், கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.

ஏதோவோர் இடத்தில், நீங்கள் உங்கள் குழந்தைக்கு உறுதுணையாக இல்லை, அல்லது முன்பிருந்ததுபோல இப்போது இல்லை என்பதையே இது குறிக்கும். எனவே இனி வரும் நாள்களில், குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் குவாலிட்டி நேரத்தில், அவர்களுடனான நெருக்கமான உறவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

* கீழ்க்காணும் கேள்விகளை குழந்தையிடம் கேட்டு, விடைக்கேற்றபடி உங்களைச் சரிசெய்துகொள்ளுங்கள்.

நான் செய்த எந்த விஷயம் உன்னைக் காயப்படுத்தியது?

உனக்கு இப்போது கோபமாக உள்ளதா, வருத்தமாக உள்ளதா?

நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?

நீ ஸ்ட்ராங்கான குழந்தை என்ற உண்மையை, இப்போது நீ உணர்கிறாயா?

Parenting
Parenting

* புரிந்துகொள்ளும் வயதில் இருக்கும் குழந்தை என்றால், வெறுப்பு என்ற வார்த்தையின் வீரியத்தை அவர்களுக்குச் சொல்லுங்கள். அந்த வார்த்தையை உங்களை நோக்கி அவர்கள் சொன்னதால், உங்களுக்கு மனத்தளவில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் கூறுங்கள்.

* குழந்தையை, அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் செலவழிக்க அனுமதியுங்கள். ஒரு விடுமுறை நாளில், ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பொறுமையாக அமர்ந்து பேசுங்கள்.

மீண்டும் குழந்தையுடன் பேசும்போது, கீழ்க்காணும் விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அவை...

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.
பூங்கொடி பாலா

உங்களிடம் ஹேட் யூ சொல்லும் குழந்தையிடம், கீழ்க்காணும் விஷயங்களை அன்பாகச் சொல்லுங்கள்.

* 'எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம். எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீதான். உன்னுடைய செய்கைகள், உணர்வுகளெல்லாம் எங்களுக்குப் புரிகின்றன. நாங்கள் எப்போதும் உனக்காக, உன்னோடு உடனிருப்போம்! வீ லவ் யூ லாட்!'

* 'ஹேட் யூ' வார்த்தை உபயோகம், தவறென சொல்லிக்கொடுங்கள்!

* பெற்றோர்கள் சிலர், `ஐ ஹேட் யூ' என்று குழந்தைகள் சொன்னால் ரசிக்கிறார்கள். தன் வயதுக்கு மீறிய அந்த வார்த்தைகளைக் குழந்தை சொன்னவுடன், 'குட்டி எப்படியெல்லாம் பேசுது பாரு' என்று சிரித்து மகிழ்கிறார்கள். இப்படிச் செய்வதை பெற்றோர் தவிர்த்தால் மட்டுமே, குழந்தைகள் அதைச் சொல்வதை நிறுத்துவார்கள். எனவே பெற்றோரே... அடுத்த முறை நீங்கள் கவனமாக இருங்கள்!

கோபத்தை மற்றவர்களின் மீது வெறுப்புக்கொள்ளாமல் எப்படி வெளிப்படுத்தலாம் எனக் பெற்றோர் அல்லாத வேறொரு நபரைப் பார்த்து 'ஐ ஹேட் ஹிம்/ஹெர்' எனக் கூறினால், பெற்றோர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபரால் குழந்தைக்கு ஏதாவது அசௌகர்யம் ஏற்பட்டிருந்தால்தான் குழந்தை அப்படிக் குறிப்பிடும். ஆகவே, 'ஏன்டா அவரைப் பார்த்து அப்படிச் சொன்ன? அவர் என்ன பண்ணினார்?' என்று குழந்தையிடம் கவனமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் பூங்கொடி பாலா.



from Vikatan Latest news https://ift.tt/JuH630L

Post a Comment

0 Comments