செபியின் 30 நாள் தீர்வு... வரவேற்க வேண்டிய ஆரம்பம்…முதலீட்டாளர்களைப் பாதுகாக்க இது மட்டும் போதாது..!

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு, அது தொடர்பான அனுபவ ஞானத்தை வழங்குவதற்கு முக்கியமானதொரு முன்மொழிவை செபி அறிவித்துள்ளது. ‘முதலீட்டாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கு, 30 நாள்களுக்கு முந்தைய தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்பதே அது.

இதற்கு முன்பு இருந்த விதிமுறைகள் பல குழப்பங்களை உருவாக்கியதே செபியின் இந்தப் புதிய அறிவிப்புக்குக் காரணம். அதாவது, ஒரு நாளைக்கு முந்தைய சந்தை தரவுகளைப் பயன்படுத்தலாம் என 2024-ல் கூறப்பட்டது. இது தவறான வழிகாட்டுதல்களுக்கு வழிவகுப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, ‘மூன்று மாதங்களுக்கு முந்தைய தரவுகளைப் பயன்படுத்தலாம்’ என்று 2025 ஜனவரியில் செபி அறிவித்தது. இந்த இரண்டு நடைமுறைகளுமே முதலீட்டாளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தியதோடு, அவை இயல்பான பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இல்லை. இதற்கு மத்தியில், ‘பங்குச் சந்தை கல்வி’ என்ற பெயரில் நேரடி சந்தை விலைத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் அதிகரித்தது.

இந்தப் பின்னணியில்தான், முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தப்படும் பங்கு விலைத் தரவுகள், குறைந்தது 30 நாள்களுக்கு முந்தைய தாக இருக்க வேண்டும் என்ற நடுத்தரமான ஒரு தீர்வை செபி தற்போது முன்வைத்துள்ளது.

செபியின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டியது. இதன்மூலம், முதலீட்டாளர்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வு அளிப்பவர்களுக்குத் தெளிவு கிடைக்கும். முதலீட்டாளர்களுக்கும் குழப்பம் குறையும். ஆனால், இது மட்டுமே போதாது. சந்தைத் தரவுகள் தவறான வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், முதலீட்டாளர்கள் சரியான முறையில் வழிநடத்தப்படுவதை உறுதி செய்யவும் ஒழுங்குமுறை விதிகள் அடங்கிய தீவிர கண்காணிப்பு அவசியம்.

காரணம், இன்ஃப்ளூயன்சர்கள், போலி நிபுணர்கள் பலர் எந்தவிதக் கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் மதிக்காமல் சமூக ஊடகங்களில் ‘முதலீட்டாளர் கல்வி’ என்ற பெயரில் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்துவதோடு, பல மோசடிகளையும் செய்துவருகின்றனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில், முதலீட்டாளர்களை வழிநடத்துவதும், பாதுகாப்பதும் சவாலானதாக மாறிவருகிறது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கல்வித் தகுதி அவசியம் என்பதை உணர்ந்திருக்கும் நாம், மக்களின் பல லட்சம் கோடிகள் புழங்கும் பங்குச் சந்தை குறித்து பேசுவதற்கும், பயிற்சி கொடுப்பதற்கும் கல்வித் தகுதி, சான்றிதழ் போன்றவை அவசியம் என்பதை உணர வேண்டும்.

எனவே, முதலீட்டாளர்கள் கல்வி ஒழுங்குமுறை சட்டம் வகுக்கப்பட வேண்டும். அதன்மூலம், ‘முதலீட்டாளர்கள் கல்வி’ தொடர்பாக இயங்குபவர்கள் முறையான தகுதிகளுடன் சான்றிதழ் பெற்று இயங்க வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவருவதே சந்தைக்கும் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும். இல்லையென்றால், ‘30 நாள் விதி’ போன்ற முயற்சிகள் அர்த்தமற்றதாகிவிடும்!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/Y2Jgtak

Post a Comment

0 Comments