Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்.
தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் 'சாம்னிலோகுய்' (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல... மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை 'பாராசோம்னியா' (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
தூக்கத்தில் பேசும் வழக்கமானது பொதுவாக சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். தூக்கத்தில் இருப்பவர்கள் சம்பந்தமில்லாத வார்த்தைகளையோ அல்லது யாரிடமோ உரையாடுவது போன்றோ பேசலாம். தூக்கத்தில் பேசியது அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு ஞாபகம் இருக்காது.
மற்றவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும். பெரும்பாலும் இது ஆபத்தான, பெரிய பிரச்னையே அல்ல. ஆனால், பின்வரும் நிலைகளில் கவனம் தேவை.
அதாவது, தூக்கத்தில் பேசுவது என்பது அடிக்கடி நிகழும்போது, தூக்கத்தில் அதிக சத்தத்துடன் கத்துவது அல்லது பயப்படுவது (Night Terrors), தூக்கத்தில் பேசுவதோடு, தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் (Sleep Walking) சேர்ந்து இருப்பது, பகல் நேரத்தில் அதிக சோர்வாகவோ அல்லது தூக்க கலக்கத்துடனோ இருப்பது, அதிக மன அழுத்தம் அல்லது பதற்றம் இருக்கும்போது... மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையில், அடிப்படையான சில விஷயங்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.
சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். முறையான தூக்கம் தடைப்படும்போது இந்தப் பிரச்னை வரலாம். காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஏற்படும்போதும் வரலாம். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. ஆனாலும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்குச் சிகிச்சை தேவைப்படலாம்.
அதாவது, தூக்கத்தில் பேசுவது உங்கள் தூக்கத்தைப் பாதித்தாலோ, மறுநாள் காலை எழுந்ததும் களைப்பாக உணர்கிறீர்கள் என்றாலோ மருத்துவ ஆலோசனை அவசியம். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள் என்றால், காலை ஷிஃப்ட்டில் வேலை பார்க்க முடியுமா என யோசிக்கலாம். ஸ்ட்ரெஸ் இருந்தால் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளை யோசிக்க வேண்டும்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் போன் அல்லது டிவி பார்ப்பதைத் தவிர்க்கவும். தூங்குவதற்கு முன் இரண்டு நிமிடங்கள் எளிய மூச்சுப்பயிற்சி அல்லது ரிலாக்சேஷன் பயிற்சிகளைச் செய்யலாம்.
தூங்குவதற்கு முன் வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்கவும். இந்த எளிய விஷயங்களைப் பின்பற்றியும் பிரச்னை சரியாகவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/7r9kqng
0 Comments