அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிவிடலாம்… ஆட்சிக்கு வந்த பிறகு அடக்குமுறைகளைக் கையாண்டு துரோகங்கள் இழைத்தாலும் விவசாயிகள் ஏமாளிகளாகவே இருப்பார்கள்’ எனத் தப்புக்கணக்குப் போடும் அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் விவசாயிகள் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்குப் பாதகமாகவும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை அப்போதைய அ.தி.மு.க அரசு ஆதரித்ததாலும், எட்டுவழிச்சாலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்னைகளில் விவசாயிகளை வஞ்சித்ததாலும் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்குத் தமிழக விவசாயிகள் சரியான பதிலடி கொடுத்தார்கள்.
‘நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு லாபகரமான விலை வழங்கப்படும்’ என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, அந்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. அதோடு சிப்காட் தொழிற்பேட்டை, பரந்தூர் விமானநிலையம், உயர்மின் கோபுரம் போன்றவற்றை அமைக்க விவசாய நிலங்களை அபகரித்தது; கல்குவாரிகள் மூலம் அத்துமீறல்களைத் தொடர்ந்தது; கறிக்கோழி உற்பத்தி விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்தது; தஞ்சாவூரில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், கரும்பு விவசாயிகளை வஞ்சித்த விவகாரத்தில் ஒதுங்கி நின்றது எனப் பல்வேறு விஷயங்களில் தி.மு.க அரசு, விவசாயிகளுக்குத் துரோகங்களை இழைத்ததோடு, கடும் அடக்குமுறைகளையும் கையாண்டது.
இவற்றுக்கெல்லாம், தற்போது நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயிகள் சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது, `விவசாயிகளுக்கு 15,000 ரூபாய் முதலீட்டு உதவித்தொகை மற்றும் 100% இலவசப் பயிர்க் காப்பீடு திட்டம் வழங்கப்படும். ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்கள் 50% தள்ளுபடி செய்யப்படும், கரும்புக்கு 1 டன்னுக்கு 4,000 ரூபாயும், நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும் விலை வழங்கப்படும்’ என வாக்குறுதிகள் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்.
முத்தாய்ப்பாக, ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் இனி ஒரு நெல்கூட மழையில் நனைந்து வீணாகாது. நெல் கொள்முதலுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது’ என வாக்குறுதிகளை வழங்கி விவசாயிகளின் இதயத்தில் இடம்பிடித்தார், விஜய். அதனால்தான், கடந்த 59 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை மாற்றி மாற்றி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்துவிட்டு, மிகுந்த நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளார்கள்.
அடுத்த முதல்வராகப் பதவியேற்பவர், விவசாயிகள் மேல் மிகுந்த அக்கறையோடும் நேர்மையோடும் செயல்பட்டு, வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறை வேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
- ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/spFxGho
0 Comments