வேளாண் கடன் தள்ளுபடி… முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ எனச் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்திருந்தது. விவசாயிகளின் பேராதரவோடு வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்... 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கடன் பெற்றுள்ள விவசாயிகளின் முழுமையான கடன் விவரப் பட்டியல்களை உடனே சேகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விவசாயிகள், ஒரு முக்கியமான கோரிக்கையையும் வைக்கிறார்கள்.

‘ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனில் 50% தள்ளுபடி செய்யப்படும்’ எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. விவசாயிகள் சங்கத் தலைவர்களோ, ‘எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வலியுறுத்துகிறார்கள்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் விவசாயக் கடன் தள்ளுபடி விஷயத்தில் விவசாயிகளிடம் பாரபட்சம் பார்க்காமல் அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளனர். இதுதான் நியாயம். ஐந்து ஏக்கர் நிலம் இருந்தாலும், 10 ஏக்கர் நிலம் இருந்தாலும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சம்தான் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது.

உதாரணமாக, கரும்பு சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு 60,000 ரூபாய் பயிர்க்கடன் நிர்ணயம் செய்துள்ளது, தமிழக அரசு. இந்த அடிப்படையில் 10 ஏக்கர் நிலமுள்ள ஒரு விவசாயி கரும்பு சாகுபடி செய்ய, 6 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்க வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்கப்படுவதில்லை. அந்த விவசாயி, அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் தான் கடன் பெற முடியும். எனவே, கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமில்லை. இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிப்புகள் ஏற்படும்போது, சிறு விவசாயிகள் சிறிய அளவிலும், பெரு விவசாயிகள் பெரிய அளவிலும் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள்.

பாசன வசதி இல்லாத மானாவாரி விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசம். ஒரு ஏக்கர் நிலம் இருந்தாலும் 10 ஏக்கர் நிலம் இருந்தாலும் அவர்கள் ஏழை விவசாயிகள்தான். விவசாயத்துக்கான இலவச மின்சாரம் கிடைக்காத விவசாயிகளுக்கும் அதே நிலைதான். எல்லாவற்றுக்கும் மேலாக, வேளாண் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு வழங்கப் படும் சலுகை அல்ல. இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் விவசாயிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வது அரசின் கடமை.

வேளாண் கடன் தள்ளுபடி பெறுவது விவசாயிகளின் உரிமை. எனவே, இதில் தமிழக அரசு எந்த பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டும். ஒட்டுமொத்த வேளாண் கடன் தள்ளுபடி தொகையில், பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் சில அதிகாரிகள் சொல்லும் சாணக்கியத்தனமான ஆலோசனைகளுக்கு முதல்வர் விஜய் செவி சாய்க்காமல், அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/5oPwe7A

Post a Comment

0 Comments