யார் சொல்வது உண்மை?
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாம் என விஜய் கணக்கு போட்டிருந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக மௌனம் காத்து வருகிறது.
இதனிடையே அமமுக எம்.எல்.ஏ தவெகவுக்கு ஆதரவாக கடிதம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், தனது கட்சி எம்.எல்.ஏ. கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டி இருந்தார். பிறகு, ஆளுநர் மாளிகை விரைந்த அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தான் த.வெ.க.வுக்கு ஆதரவாக கடிதம் வழங்கவில்லை என்று கூறினார்.

தன் பெயரில் போலி கடிதம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். போலி கடிதம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தவெக தரப்பில் போலி கடிதம் அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அமமுக. எம்.எல்.ஏ. காமராஜ் தவெகவுக்கு ஆதரவளித்து கையெழுத்திடும் வீடியோவை தவெக வெளியிட்டிருக்கிறது. இதில் யார் சொல்வது உண்மை? என மக்கள் குழம்பி போயிருக்கின்றனர்.
முதல்வர் அரியணையில் அமர்வாரா விஜய்?
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.
காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருப்பதால் விஜய்யிடம் 116 இடங்கள் இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து IUML கட்சி ஆதரவு அளிக்கிறோம் என தெரிவித்துவிட்டு பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது.
விசிக தலைவர் திருமா தவெகவுக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தற்போது மெளனம் காத்து வருகிறார். திருமா இன்று விஜய்க்கு ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதல்வர் அரியணையில் அமர்வாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து இணைந்திருங்கள்...
from Vikatan Latest news https://ift.tt/CLfTAKm
0 Comments