பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும், களைவதிலும்தான் இருக்கிறது ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சி மதிப்பீடு. ஆனால், அன்றாடச் செய்திகளாகக் கடந்துசெல்லும் அளவுக்கு இந்த வன்முறைகள் இங்கே இயல்பாகி விட்டன. சமீபகாலங்களில் இந்த அத்துமீறல்கள் கொலையில் முடிவதும் அதிகரித்திருக்கிறது.
கடலூர் மாவட்டம், மீதிக்குடியைச் சேர்ந்த 25 வயது காமாட்சி, தன் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்தார். காமாட்சியின் பெற்றோருக்கு அவ்வப்போது கடன் கொடுத்து வந்த 65 வயது மகேந்திரன், காமாட்சிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்தப் பெண் கண்டிக்கவே, அவருடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் வதந்தி பரப்பியிருக்கிறார் மகேந்திரன்.
ஒருகட்டத்தில் மகேந்திரனை கண்டித்த காமாட்சி, அதை வீடியோவாகப் பதிவு செய்து ஊரில் சிலருக்கு அனுப்பியிருக்கிறார். அந்த ஆத்திரத்தில்தான், காமாட்சியை இரும்புக் குழாயால் அடித்தே கொலை செய்திருக்கிறார் மகேந்திரன்.
காமாட்சி, வீடியோவை சிலருக்கு அனுப்பிய `அவமானம்’தான் மகேந்திரனை கொலை செய்யுமளவுக்கு மிருகமாக்கியுள்ளது. ஆனால், ஒரு பெண்ணை பாலியல் வக்கிரத்துடன் அணுகியதுதான் உண்மையில் அவமானகரமான செயல்.
மகேந்திரன் மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்களின் மனநிலையும் இப்படித்தான் சீழ்ப்பிடித்துள்ளது. இதில் பணம் உள்ளவர், இல்லாதவர், அதிகாரம் உள்ளவர், இல்லாதவர் என யாரும் விதிவிலக்கல்ல. `ஆண்கள் என்றால் பெண்களை இச்சைப் பொருளாகப் பார்ப்பார்கள்தான், அணுகுவார்கள்தான்' என்பது இயல்பாக்கப்பட்டுள்ளது. முதலில் அடித்து நொறுக்கப்பட வேண்டியது, ‘ஆம்பளைனா அப்படித்தான் இருப்பான்’ என்ற எண்ணத்தையும், திமிரையும்தான்.
பாதிக்கப்பட்ட பெண்களே குற்றவாளியாக்கப்படுவது நம் சமூகத்தின் இன்னொரு சாபம். இதனால் பெரும்பாலான பெண்கள், இதுமாதிரி கயவர்களின் பாலியல் தொல்லைகளை மென்று விழுங்கி சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள். சிலர்தான், அதற்கு எதிராகத் தைரியத்துடன் குரல் கொடுக்கிறார்கள். காவல்துறை முதல் அலுவலக ஐ.சி.சி வரை புகார் அளிக்கிறார்கள். அந்தப் புதிய வழக்கத்தைத் தாங்கமுடியாத ஆண் சமூகம், அவர்கள் மீது பழிபோடுவது முதல் பழிவாங்குவது வரை ஆங்காரம் கொள்கிறது. இப்போது கொலையும் செய்கிறது.
குற்றங்களை எதிர்க்கும் தொடர் செயல்பாடே அதற்கு எதிரான முதல் ஆயுதம். அப்படி எதிர்க்கும்போது வேகத்துடன் விவேகத்தையும் கைகொண்டு பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும். 181, 1098 போன்ற ஹெல்ப்லைன் எண்களை அழைப்பது முதல், மெசேஜ் ஸ்கிரீன்ஷாட், ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் உரிய தளங்களில் புகார் அளிப்பது வரை தைரியமாக எதிர்வினையாற்ற வேண்டும். அந்தப் பெண்களுக்கு குடும்பமும் சமூகமும் ஆதரவளிக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்புதான், முன்னேற நினைக்கும் சமூகத்துக்கான அடித்தளம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/xwI4SQL
0 Comments