திருப்பூர் மாவட்டம், குண்டடம் விடங்கீஸ்வரர் திருக்கோயில் : காசிக்கு இணையான கால பைரவர்!

காசிக்கு இணையான தலங்கள் தமிழகமெங்கும் பல உள்ளன. அப்படிப்பட்ட தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே காசி சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். அப்படி ஒரு தலம் தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 16 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது குண்டடம். இங்கு ஈசந் விடங்கீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி. இத்தலத்து பைரவர் மிகவும் மகிமை வாய்ந்தவர் என்கிறார்கள். வாரியார் சுவாமிகளுக்கும் பிடித்தமான ஆலயம் இது. ‘காசு இருந்தால், காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லையேல், குண்டடத்துக்கு வாருங்கள்’ என்று சொல்லி இத்தலத்தில் அருளும் கால பைரவ வடுகநாத சுவாமியைப் போற்றியிருக்கிறார் கிருபானந்த வாரியார்.

குண்டடம் விடங்கீஸ்வரர் கோயில் விசாலாட்சி அம்மன்

காசி விசுவநாதரின் அருளைப்பெற, ‘விடங்க முனிவர்’ தவத்தில் ஆழ்ந்திருந்தார். குண்டடத்தின் வனப்பகுதிகளில் வாழும் மிருகங்களால் விடங்க முனிவருக்குத் தொந்தரவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கால பைரவரை அனுப்பி அவரைக் காக்குமாறு கட்டளையிட்டிருந்தார் சிவபெருமான்.

‘விடங்க முனிவர் தவம் முடிக்கும்வரை அவருக்கு நீ காவல் காக்க வேண்டும்’ என சிவபெருமான் உத்தரவிட்டிருக்க, விடங்க முனிவரின் தவமோ பல நாள்கள் தொடர, கால பைரவரும் அவருக்குக் காவலிருக்க, இருவரைச் சுற்றியும் புற்று தோன்றி, அவ்விருவரையுமே மூடிவிட்டது.

ஒருமுறை மிளகு வியாபாரி ஒருவர் அந்த வழியாகச் செல்லும்போது முதியவர் ஒருவர் அவரிடம் நாலு மிளகுகொடு என்று கேட்டிருக்கிறார். அதைத் தரமனமில்லாமல் வியாபாரி மூட்டையில் பாசிப்பயறு உள்ளது என்று கூறினார். ஆனால் ஊருக்குச் சென்று பார்த்தபோது மூட்டையில் இருந்த மிளகுகள் எல்லாம் பாசிப்பயறாக மாறியிருந்தது. இதைக் கண்ட வியாபாரியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது கூட்டத்திலிருந்த வணிகர் ஒருவர்மீது அருள்வந்து இறங்கிய கால பைரவர், ‘முதியவராக வந்து தோன்றியது நான்தான்' என்றும் மேலும், `பாண்டிய - சேர நாட்டு எல்லையில் உள்ள இலந்தை மரத்தடியில் பெரிய புற்று ஒன்று வளர்ந்திருக்கும். அந்தப் புற்றுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டால், அப்புற்றிலிருந்து எனது சிலை வெளிப்படும். அதை எடுத்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கி நான் காத்தருள்வேன்’ என்று ஒலித்திருக்கிறார். அதன்படியே, பாண்டிய மன்னனும் கோயில் எழுப்பி வழிபாடு நடத்த, அந்த மன்னனின் வாரிசுகளுக்கு இருந்த உடற்கோளாறுகள் நிவர்த்தியாகின.

குண்டடம் விடங்கீஸ்வரர்

இத்திருக்கோயிலில் விடங்கீஸ்வரரும் - விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்தாலும், கால பைரவர் கோயில் என்றால்தான் பக்தர்கள் அனைவருக்கும் தெரியவரும். இங்குள்ள ஈசன், ‘விடங்கீஸ்வரர் ‘என்ற திருப்பெயருடன் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். விசாலாட்சி அம்மனுக்கு தனிச் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சனி பகவான், நவகிரகங்கள் எனத் திருக்கோயில் தெய்வங்கள் அனைத்தும் தனித்தனிச் சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

கொங்கு கால பைரவர் தடைகளைத் தகர்த்தெறியும் வல்லமைக் கொண்டவர், பக்தர்களுக்கு நேரும் எந்தவொரு தடையையும் தகர்த்து, தன் இன்னருளால் காத்தருள்வார் கொங்கு கால பைரவர். பைரவருக்கு உகந்த அஷ்டமி தினங்களில், பைரவருக்குப் பிடித்தமான சிவப்பு வஸ்திரம், செவ்வரளி மாலை, மாதுளம் பழங்கள் ஆகியவற்றை வைத்துப் படைத்து, எந்தவொரு காரியத்தை வேண்டி னாலும், விரைவில் அதை நிவர்த்தியாக்கித் தருவார் பைரவர்.

திருமணத்தடை உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நடைபெறும் ராகு கால பூஜையில் கலந்துகொண்டு, விபூதி அபிஷேகத்தில் அருள்பாலிக்கும் கால பைரவரைத் தரிசித்தால், உடனடியாக நல்ல வரன் அமைந்து, திருமண வாழ்க்கை சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை. எதிரி பயம் நீங்க, கால பைரவருக்கு வடை மாலையும், வெண் பொங்கலும் நிவேதனம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

குண்டடம் விடங்கீஸ்வரர் கோயில்

இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், எந்தவொரு வேண்டுதலாக இருந்தாலும், பைரவருக்கு, ‘மிளகுத் திரி’ தீபமேற்றி வழிபடுவது நடைமுறை. குண்டடத்தில் கால பைரவர் தோன்றுவதற்கு, மிளகு வணிகர்கள் ஒரு காரணமாக இருந்தமையால், சாதாரண தீபத் திரிகளைவிட, இங்கு மிளகுத் திரி தீபமேற்றி வழிபடுவதன்மூலம் பைரவரின் பூரண அருளை நாம் பெறலாம்.

இன்றைய நவீன உலகத்தில் பெண்ணின் கருவறையில் உருவாகும் குழந்தை எப்படியிருக்கிறது என்பதைக் காண, மருத்துவ உலகில் பல சாதனங்கள் வந்துவிட்டன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு மருத்துவத் தொழில்நுட்பமும் இல்லாத அன்றைய காலத்திலேயே, கருவில் இருக்கும் குழந்தை இப்படித்தான் இருக்கும், அதன் வளர்ச்சி இவ்வாறுதான் இருக்கும் என்பதை இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஒரு தூணில் சிற்பங்களாகவே செதுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்; வியக்கவைக்கும் சிற்ப அற்புதம் இது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை குண்டடம் சென்று ஈசனையும் காலபைரவரையும் வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.



from Vikatan Latest news https://ift.tt/I0pRkXz

Post a Comment

0 Comments