நேர்மையானவர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்ச வச்சுட்டீங்க..!" - மதுரையில் கமல்ஹாசன்

``கொரோனாவை விட மக்களிடம் தைரியம் வேகமாக பரவட்டும்" என்று மதுரை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன்

மதுரை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்கட்ட பரப்புரையை திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கமல் பேசும்போது, ``மாநகராட்சியில் வார்டு சபை அமைத்து, வார்டுகளில் செலவான கணக்குகளை மக்களிடையே நேரடியாக சொல்ல வைப்பேன். சொல்லவில்லை என்றால் நான் செய்ய வேண்டியதை செய்வேன்.

ஏனென்றால், அது மன்னிக்க கூடாத குற்றம். அதை எங்கள் கட்சியில் இருந்து யாரையும் செய்ய விடமாட்டேன். அந்த வாக்குறுதியுடன்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

கமல் பரப்புரை

ஒரு வார்டில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என கூற நாங்கள் தயார். அவர்கள் தயாரா? எத்தனை கழகங்கள் உள்ளது? எல்லாம் வியாபாரம். அவர்கள் இப்படி கூறத் தயாராக இருக்கிறார்களா?

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் கட்சிக்காக நிற்கவில்லை. மக்களுக்காக நிற்கின்றனர். அந்த பிரதிநிதிகள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் பெயர்தான் மக்கள் நீதி மய்யம்.

கமல் ஹாசன்

நான் எதற்கு அரசியலுக்கு வந்தேன். சந்தோஷமத்தானே என்னை வச்சிருந்தீங்க. எனக்கு புகழுக்கு பஞ்சமா? பணத்துக்கு பஞ்சமா? நான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை காட்ட அரசியலுக்கு வந்தேன். இந்த வண்டி கூட நீங்க கொடுத்த காசுல வாங்கினதுதான்.

சினிமாவுல கூத்தாடிட்டு அது போதும்னு நினைக்கல. மக்களுக்கு நன்றி சொல்லனும்னு நினைச்சேன். வாழ்க்கையில் நானும் மனிதனாக வாழ்ந்தேன் என்ற அர்த்தத்திற்காக அரசியலுக்கு வந்தேன். நேர்மையாளர்களுக்கு வாக்கு கேட்டு கெஞ்ச வச்சுட்டீங்க.

மறுபடியும் வெற்றி பெற வையுங்கள் என கர்வத்துடன் கேட்க வேண்டிய என்னை, வியாபரத்திற்காக வாக்கு கேட்கும் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாத மாதிரி கெஞ்ச விட்டீங்க. நான் நாளைய தலைமுறைகளுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்.

கமல் பரப்புரை

மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய தைரியம் மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டும்தான் இருக்கு.

மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். கேள்வி கேட்பதற்கும் மாற்றம் செய்வதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

தூங்கா நகரம் என்பது மக்கள் எப்பொழுதும் தூங்காமல் இருப்பதற்கு அல்ல. சந்தோஷமாக தூங்காமல் இருக்க வேண்டும். இங்கு மனசாட்சி மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறது. நகரம் தூங்காமல் உள்ளது. எல்லாரும் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும்.

நீங்கள் பயந்து நின்றீர்கள் என்றால் அப்படியே செல்வார்கள். தைரியத்துடன் கேளுங்கள். கொரோனா விட தைரியம் வேகமாக பரவட்டும், நாளை நமது ஆகும்" என்றார்.



from Latest News

Post a Comment

0 Comments