மனைவி எப்போதும் கணவனை மதிக்க வேண்டும் என்று பத்தில் ஒன்பது இந்தியர்கள் கருதுகின்றனர் என்று Pew ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள Pew Research Center, உலகின் முன்னணி ஆய்வு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. பல்வேறு தலைப்புகள், பிரச்னைகள் ஆகியவை குறித்து உலகளாவிய ஆய்வுகளுக்குப் பேர் போன இந்த நிறுவனம், இந்தியாவைப் பற்றிய ஆய்வு ஒன்றைச் சமீபத்தில் மேற்கொண்டு, அதன் முடிவுகளைத் தற்போது வெளியிட்டுள்ளது.
‘இந்தியர்கள் குடும்பங்களிலும் சமூகத்திலும் பாலினத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?’ என்ற அந்த ஆய்வு, வயதுவந்த 29,999 இந்தியர்களிடம், நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2-ம் தேதி வெளியான இந்த ஆய்வு முடிவுகள், பாலினம் குறித்து இந்தியர்களின் எண்ணவோட்டங்களை வெளிச்சமிட்டிருக்கின்றன.
ஆய்வு முடிகளின்படி, ஆண், பெண் இருவரும் சம அளவில் சிறந்த அரசியல் தலைவர்களாக வரக்கூடியவர்கள் என்று 55 சதவிகித இந்தியர்கள் நம்புகின்றனர். ஆனால், மனைவி எப்போது கணவனை மதிக்க வேண்டும் என்கிற கருத்தை பத்தில் ஒன்பது இந்தியர்கள் ஆமோதிக்கின்றனர். ஆண், பெண் இருவருமே குழந்தை வளர்ப்புக்குப் பொறுப்பு என்று 62 சதவிகிதம் இந்தியர்கள் கருதும் நிலையில், 34 சதவிகிதம் பேர், ‘குழந்தைகளைப் பராமரிப்பது முதன்மையாக பெண்களின் பணி’ என்று கருதுகின்றனர்.
போலவே, பணம் ஈட்டுவதை ஆண், பெண் இருவரின் பொறுப்பாக 54 சதவிகிதம் பேர் கருதும் நிலையில், 43 சதவிகிதம் இந்தியர்கள், அது ஆண்களின் பொறுப்பு என்று நினைக்கின்றனர். மேலும், பணி வாய்ப்புகள் குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்தப் பணிகளுக்கான உரிமை பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் இருக்க வேண்டும் என்று 80 சதவிகிதம் இந்தியர்கள் கருதுகின்றனர்.
இந்தியர்கள் மகன், மகள் இருவரையும் விரும்பினாலும், 94 சதவிகித இந்தியர்கள், தங்கள் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு மகன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதே நேரம், மகள்களை விரும்புகிறவர்கள் 90 சதவிகிதம்தான். மகன், மகள் இருவருக்கும் பெற்றோரின் சொத்தில் சம உரிமை உண்டு என்று 64 சதவிகித இந்தியர்கள் கூறுகிறார்கள். வயதான பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பு முதன்மையாக ஆண்களுக்கே இருக்கிறது என்று பத்தில் நான்கு பேர் கருதுகின்றனர்.
பெண்களுக்கான சம உரிமை போன்றவற்றில், உலகளாவிய பொதுக் கருத்துடன் இந்தியர்களின் கருத்துகள் ஒத்துப்போனாலும், வீட்டிலும், பொருளாதாரத்திலும் ஆண்-பெண் சம உரிமை சார்ந்து மிகவும் பிற்போக்கான மனநிலையில் இருக்கின்றனர் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் எந்தப் பகுதியைவிடவும், தென்னிந்திய மாநிலங்களின் பெண்கள் சமூக-பொருளாதார அளவீடுகளில் மேம்பட்டிருக்கின்றனர் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
from Latest News https://ift.tt/Zs6JjrX
0 Comments