'அதிமுக சார்பில் ஒருத்தர்கூட பதவியில் இருக்ககூடாது!' - செந்தில் பாலாஜியின் அடுத்த `கரூர் ஸ்கெட்ச்'?!

அ.தி.மு.க வசம் இருந்த கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், தி.மு.க பெரும்பான்மை உறுப்பினர்கள், அ.தி.மு.க பெருந்தலைவர் மீது நிறைவேற்றிய நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம், தி.மு.க வசமாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னே, செந்தில் பாலாஜியின் பழி வாங்கும் 'கைங்கர்யம்' இருப்பதாகச் சொல்கிறார்கள்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய கவுன்சிலர்கள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம். கடந்த, 2021 - ல் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க இந்த ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றியது. மொத்தமுள்ள 20 உறுப்பினர்களை கொண்ட இந்த ஊராட்சி ஒன்றியத்தில், அ.தி.மு.க 9 வார்டுகளையும், அதன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க ஒரு வார்டையும் கைப்பற்றின. அதேபோல், தி.மு.க சார்பில் 7 வார்டுகளையும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் ஒரு வார்டையும், சுயேச்சைகள் இருவர் தலா ஒரு வார்டையும் கைப்பற்றினர். அதில் ஒரு சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர், வெற்றிப்பெற்ற பிறகு தி.மு.கவை ஆதரிக்க, தி.மு.க வசம் 8 உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் 1 என்று 9 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க பக்கம் சுயேச்சை, பா.ஜ.க உறுப்பினர்களின் ஆதரவோடு 11 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த நிலையில், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றும் அளவுக்கு அதிக உறுப்பினர்கள் இருந்தபோதிலும், அ.தி.மு.க.வில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி, பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அ.தி.மு.க.வில் பட்டியல் சமூக பெண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லை.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

அதேசமயம், தி.மு.க.வில் 5 பட்டியல் சமூக பெண் உறுப்பினர்கள் இருந்தனர். இதனால், சிக்கலான சூழல் ஏற்பட்டது. ஆனால், அ.தி.மு.க மாவட்ட செயலளரும், அப்போது அமைச்சராக இருந்தவருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தி.மு.கவில் இருந்த பட்டியல் பெண் உறுப்பினர்களில் ஒருவரை அ.தி.மு.கவுக்கு இழுக்க காய்நகர்த்துவதாகச் சொல்லப்பட்டது. அந்த வகையில், தி.மு.க. சார்பில் 7 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரமதி என்பவரை அ.தி.மு.கவினர் தங்கள் கட்சிக்கு இழுத்து, அவரை தலைவராக்கினர். 'கொல்லைப்புறம் வழியாக அ.தி.மு.க இந்த ஊராட்சி ஒன்றித்தை கைப்பற்றியிருக்கு. இதை, நாங்க சும்மாவிடமாட்டோம். எங்க கட்சி உறுப்பினரை மிரட்டி அ.தி.மு.கவில் சேர்த்துள்ளனர்' என்று தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அப்போது செய்தியாளர்களிடம் கொதித்தார். அ.தி.மு.கவினருக்கு எதிராக தி.மு.கவினர் அப்போது போராட்டமும் நடத்தினர். ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் மீறி, சந்திரமதி அ.தி.மு.க சார்பில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்கொண்டு நடந்தவற்றை விவரிக்கும் விவர அறிந்த சிலர்,

"இந்த கோபத்தில் இருந்த செந்தில் பாலாஜி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க வசம் இருந்த கடவூர் ஒன்றிய சேர்மன் பதவியில் இருந்தவரையும், 10 அ.தி.மு.க கவுன்சிலர்களையும் தி.மு.கவுக்கு இழுத்து வந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 'ஷாக்' கொடுத்தார். அதேபோல், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திலும் அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.கவுக்கு இழுத்து வந்தார். தொடர்ந்து, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும் அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.கவுக்கு இழுத்து வந்தனர். அதேபோல், மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க ஊராட்சிமன்றத் தலைவர்களை, தி.மு.கவுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான், தற்போது, தி.மு.க. ஆட்சி அமைந்ததும், கிருஷஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க.வில் இருந்து 6 உறுப்பினர்கள், தி.மு.க.வில் இணைந்தனர். இதனால், தி.மு.கவின் பலம் அதிகரித்தது.

சந்திரமதி (அ.தி.மு.க கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பெருந்தலைவர்)

இதைத்தொடர்ந்து, தலைவர் மீது கடந்த கூட்டத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த குழு கூட்டத்தில், சந்திரமதி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 16 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மீதமிருந்த 3 அ.தி.மு.க உறுப்பினர்களில் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. தலைவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அ.தி.மு.க. தலைவர் பதவியிலிருந்து சந்திரமதி நீக்கப்படுவார்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானக் கூட்டம் நடைபெற்றதால், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பா.ஜ.க உறுப்பினரும், அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்த சுயேச்சை வேட்பாளரும், அ.தி.மு.க பெருந்தலைவருக்கு எதிராக, தி.மு.க உறுப்பினர்களோடு சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். 2019 - ல் அ.ம.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்த செந்தில் பாலாஜி, அப்போது நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தார். தொடர்ந்து, கரூர் எம்.பி தொகுதி, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வசமாக்கினார். ஆனால், இடையில் 2021 - ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மட்டும், அ.தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாகநராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை தி.மு.க வசமாக்கிவிட்டார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதேநேரம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவிடம் இழந்ததை, ஆளுங்கட்சி பவரை வைத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையை கலைத்துப்போட்டு, தி.மு.க வசமாக்கி வருகிறார். அதில் விழுந்த ஒரு விக்கெட்தான், கிருஷணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவி. அடுத்து, மாவட்ட சேர்மன் பதவியையும் தி.மு.க வசமாக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறார். அ.தி.மு.க சார்பில் ஒரு பதவிகூட இருக்ககூடாதுனு நினைச்சு செயல்படுகிறார். அடுத்து, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயித்த சொற்ப எண்ணிக்கையில் உள்ளவர்களையும், தி.மு.கவுக்கு இழுக்கும் அசைமென்டை செயல்படுத்த இருக்கிறார்களாம். ஆனால், இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய அ.தி.மு.கவினரோ, அமைதி மட்டுமே காக்கின்றனர்" என்றார்கள்.

இதுபற்றி, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம்.

"நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலை, தி.மு.கவினர் நேர்மையாக நடக்கவிடவில்லை. அவர்களுக்கு சார்பாக நடத்திக்கொண்டனர். இந்த நிலையில், கடந்த 2021 - ல் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க பெரும்பான்மையாக கைப்பற்றிய ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அ.தி.மு.க உறுப்பினர்களை கேஸ் பயம் காட்டி மிரட்டி, தி.மு.கவுக்கு இழுத்து வருகின்றனர். மாவட்ட சேர்மன் பதவியையும் தங்களுக்கு சார்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர்களையும் மிரட்டி தி.மு.கவில் சேர்ர்த்து வருகின்றனர். செந்தில் பாலாஜி, இதை திட்டமிட்டே செய்து வருகிறார். ஆனால் இதை. நாங்கள் சும்மாவிடமாட்டோம்" என்றார்கள்.

தி.மு.க தரப்பில் கேட்டால்,

செந்தில் பாலாஜி

"நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. தி.மு.க ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையில், அ.தி.மு.க கட்சி மீதுள்ள வெறுப்பில் பலமட்டத்திலும் உள்ள உறுப்பினர்கள், ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியங்களில் பதவிகளில் உள்ள அ.தி.மு.கவினர் தாமாகவே தி.மு.கவுக்கு வர்றாங்க. இதனால், கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க கட்சி கடலில் கரைத்த பெருங்காயமாக காணாமல் போய்கிட்டு இருக்கு. அந்த பதட்டத்தில்தான், அ.தி.மு.கவினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீண் பழி போடுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தப்ப, அவங்கதான் ஆளுங்கட்சி பவரை பயன்படுத்தி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் கவுன்சிலரான சந்திரமதியை அ.தி.மு.கவுக்கு மிரட்டி இழுத்தனர். அப்போது, அ.தி.மு.க பண்ணியதைவிடவா, தி.மு.கவினர் நாங்க இப்போ பண்ணிட்டோம்?" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/lbvi70k

Post a Comment

0 Comments