வேலி தகராறில் விவசாயி கொலை - 4 வருடங்கள் கழித்து தம்பதிக்கு ஆயுள் சிறை!

கரூர் மாவட்டம், கடவூர் தெற்கு அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). விவசாயியான இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்துவந்தார். இவருக்கும், இவர் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ராமனுக்கும் (61), இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இடப் பிரச்னை சம்பந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 2-ம் தேதி அந்த பிரச்னைக்குரிய இடத்தில் வேலி அமைப்பது தொடர்பாக லட்சுமணனுக்கும், ராமனுக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட லட்சுமணன்

இருவரும் வாய்வார்த்தைகளால் மாறி மாறி பேசியபடி, தகராறில் ஈடுப்பட்டனர். அப்போது ஆத்திரமடைந்த ராமன், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து லட்சுமணனை பலமாகத் தாக்கியுள்ளார். இதற்கு, ராமனின் மனைவி சின்னப்பொண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் தாக்கியதில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய லட்சுமணனை அவர் உறவினர்கள் மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு லட்சுமணன் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, பாலவிடுதி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராமனை கைது செய்தனர். இதற்கிடையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி நசீமாபானு தீர்ப்பு தற்போது வழங்கியிருக்கிறார். அதில், ராமன் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், ராமனுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாயும், சின்னப்பொண்ணுக்கு ரூ.3 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

கைது

இதையடுத்து, போலீஸாரை இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கோர்ட் வளாகத்தில் நின்றிருந்த லட்சுமணனின் உறவினர்கள், ``அப்பாவியான லட்சுமணனை ஈவு இரக்கமின்றி ராமனும், அவர் மனைவியும் அடித்துக் கொன்றனர். அதோடு, உள்ளூரைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். எங்களையும் அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். எல்லாவற்றையும் மீறி சட்டப்போராட்டம் நடத்தினோம். இப்போது, அவங்களுக்கு ஆயுள் தண்டனை கிடைச்சுருக்கு. இப்போ, லட்சுமணனோட ஆத்மா சாந்தியடையும்" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JRSIboK

Post a Comment

0 Comments