நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் நகராட்சியில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாததால், சுயேச்சைகள் ஆதரவோடு நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் தி.மு.கவும், அ.தி.மு.கவும் முயற்சி செய்தனர். ஆனால், அவர்களுக்கு 'கடுக்காய்' கொடுத்த சுயேச்சை கவுன்சிலர் ஒருவர், 7 தி.மு.க கவுன்சிலர்கள், 7 சுயேச்சைகள், 3 அ.தி.மு.க கவுன்சிலர்களை வளைத்து, மெஜாரிட்டி காட்டியதோடு, அவர்களோடு தனிவாகனத்தில் வந்து பதவியேற்று, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இதனால், தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற பிரதானக் கட்சிகளால், குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 14 இடங்களிலும், அ.தி.மு.க 10 மற்றும் சுயேச்சை 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. நகர்மன்ற தலைவர் பதவிக்கு 17 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால், தி.மு.க, அ.தி.மு.க என யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. இதனால், இரண்டு கட்சிகளும் சுயேச்சைகளை 'வளைக்க' முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், 31 - வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஜய்கண்ணன் என்பவர், 17 கவுன்சிலர்களை வளைத்து, குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றப்போகும் சூழலை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். தனக்கு ஆதரவு தெரிவிக்கும் 17 கவுன்சிலர்களோடு தனி வாகனத்தில் வந்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.
'குமாரபாளையம் நகராட்சியில் என்னதான் நடக்கிறது?' என்று விசாரித்தோம்.
"குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியாகவும், நகராட்சியாகவும் உள்ளது. குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி இருந்து வருகிறார். அவர் தொகுதியில் வரும் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிகளை அ.தி.மு.க வசமாக்கணும்னு நினைச்சார். அதேபோல், அவரது பூர்வீக வீடு உள்ள ஆலாம்பாளையம் பேரூராட்சியையும் கைப்பற்ற வேண்டும்னு கட்சியினருக்கு உத்தரவிட்டார். ஆனால், பள்ளிப்பாளையம் நகராட்சியிலும், ஆலாம்பாளையம் பேரூராட்சியிலும் தி.மு.க மெஜாரிட்டியாக வந்துவிட்டது. குமாரபாளையம் நகராட்சியில் 10 இடங்களில்தான் அ.தி.மு.க வந்தது. அதேபோல், தி.மு.கவும் 14 வார்டுகளைதான் கைப்பற்றியது.
குமாரபாளையத்தில் ஜெயித்த 9 கவுன்சிலர்களின் ஆதரவை பெற இருதரப்பும் முட்டிமோதியது. தி.மு.க தரப்பில் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வரை விலை நிர்ணயம் பண்ணினதா சொல்றாங்க. ஆனால், அதற்குள் 31 வது வார்டில் சுயேச்சையாக வெற்றிப்பெற்ற விஜய்கண்ணன், சுயேச்சை கவுன்சிலர்கள் 7 பேர், தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேர், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் என்று மொத்தம் 17 கவுன்சிலர்களை வளைத்துவிட்டாராம். ஆளுக்கு தகுந்தமாதிரி ரூ. 25 லட்சம் முத்ல் அதிகப்பட்சம் ரூ. 50 லட்சம் வரை கொடுத்து, அவர்களை சென்னை மற்றும் ஏற்காடு அழைத்துபோய் தனது கண் அசைவில் வைத்துக்கொண்டார்.
இதனால், தங்கமணியும், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தியும், ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாக சொல்லப்பட்டது. அதாவது, விஜய்கண்ணன் அழைத்து போன அ.தி.மு.க கவுன்சிலர்கள் மூன்று பேரையும் அழைத்து வருவதோடு, அவர்களையும் சேர்த்து மொத்தமுள்ள 10 அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.கவுக்கு ஆதர தர வைக்கிறேன் என்று தங்கமணி உத்தரவாதம் கொடுத்தாராம். அதற்கு கைமாறாக, அ.தி.மு.கவுக்கு துணைத்தலைவர் பதவியை தந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம். கே.எஸ்.மூர்த்தியும் அதற்கு இசைவு தெரிவித்தாராம். இதற்கிடையில், மீதமுள்ள ஒரு சுயேச்சை வேட்பாளர் தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்தார். இதனால், தி.மு.க தரப்பில் 8 வது வார்டில் வென்ற கவுன்சிலர் சத்தியசீலன் என்பவரை நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.
ஆனால், தங்கமணி தரப்பால், விஜய்கண்ணன் கஸ்டடியில் இருந்த அ.தி.மு.க கவுன்சிலர்களை நெருங்கவே முடியவில்லையாம். அ.தி.மு.க கவுன்சிலர்களை, ரூ. 1 கோடி வரை வாங்கிகொண்டு விஜய்கண்ணனோடு அனுப்பி வைத்ததே, குமாரபாளையம் நகர பொறுப்பில் உள்ள ஒரு புள்ளிதான் என்று தெரிந்ததும், தங்கமணி கொதித்துப்போனாராம். ஆனால், அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதேபோல், கடந்த தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியில் தோற்ற தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்திக்கு, குமாரபாளையத்தை கைப்பற்றுவது வாழ்வா சாவா பிரச்னை. ஆனால், அவரால் எதையும் செய்யமுடியவில்லை.
இதற்கிடையில், விஜய்கண்ணன் பொறுப்பில் இருந்த தி.மு.கவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்களும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினரிடமும் மனு அளித்தனர். அந்த மனுவில், 'குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது. இதனால், சமூக விரோதிகள் துணையுடன் எங்களை கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பதவிப்பிரமாணம் முடிந்து வீட்டுக்கு சென்று சேரும் வரையும், மார்ச் 4 ம் தேதி நடைபெறும் நகரமன்ற தலைவர் தேர்தல், துணை தலைவர் தேர்தலிலும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய இந்த புகார் மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கே.எஸ்.மூர்த்தி மற்றும் தங்கமணியால் தனது முயற்சிக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, விஜய்கண்ணன் தி.மு.க கவுன்சிலர்களை இப்படி முன்கூட்டியே புகார் கொடுத்த வைத்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான், 2 -்ம் தேதி குமாரபாளையத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்கட்டமாக, 11 பேர், இரண்டாம் கட்டமாக 18 பேர், மூன்றாம் கட்டமாக 4 பேர் என மூன்றுகட்டங்களாக கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில், இரண்டாம் கட்டமாக பதவியேற்றவர்கள்தான், விஜய்கண்ணன் தலைமையிலான 18 கவுன்சிலர்கள். தனி வாகனத்தில் 17 கவுன்சிலர்களையும் அழைத்துவந்து, பதவியேற்ற வைத்தார். 4 -ம் தேதி அவர்களை பாதுகாக்க வேண்டுமே என்று விஜய்கண்ணன் அச்சத்தில் இருக்கிறாராம். `குமாரபாளையத்தை கைப்பற்றுவது எங்களுக்கு கௌரவப் பிரச்னை' என்று நினைக்கும் தங்கமணியும், கே.எஸ்.மூர்த்தியும் எல்லா சக்திகளையும் எய்து, விஜய்கண்ணன் வசம் இருக்கும் சுயேச்சை மற்றும் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்களை 'இழுத்துவரும்' பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்களாம். ஆனால், யார் யாரை கவுக்கப் போறாங்கனு 4 - ம் தேதி தெரிஞ்சுடும்" என்றார்கள்.
இதுகுறித்து, விஜய்கண்ணன் தரப்பில் பேசினால்,
"நாங்க யாரையும் பணம் கொடுத்து இழுக்கலை. அவர்களாகவே எங்களை நம்பி வந்திருக்காங்க. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க தரப்பில் குறுக்கே புகுந்து ஆட்டையை கலைக்கலாம்னு பார்க்கிறாங்க. அது, நடக்காது. கடத்திக் கொண்டுபோய் மிரட்டி, அவங்களுக்கு சார்பாக வாக்களிக்க வைக்க பார்க்குறாங்க. அதற்காகதான், கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பிகிட்ட புகார் கொடுத்தாங்க. விஜய்கண்ணன் நகராட்சி தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்கள்.
கே.எஸ்.மூர்த்தி தரப்பில் பேசினால்,
"தி.மு.க சார்பில் நின்று வென்ற கவுன்சிலர்களை ஆசைவார்த்தை காட்டி, விஜய்கண்ணன் அழைத்துப்போயிருக்கிறார். ஆனால், அவரின் உண்மை முகம் தெரிந்து, கண்டிப்பாக தி.மு.க மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் தி.மு.க வேட்பாளருக்குதான் வாக்களிப்பார்கள். மத்தபடி, எந்த கவுன்சிலருக்கும் நாங்க பேரம் பேசலை. தங்கணியோடு ரகசிய உடன்பாடு செய்திருக்கிறோம் என்பதும் பொய்யானக் குற்றச்சாட்டுகள்" என்றார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/6TWvaeP
0 Comments