என் மகளுக்கு 18 வயது. அதற்குள் தலை நரைக்கத் தொடங்கி விட்டது. இளநரைக்கு என்ன காரணம்? அதை ரிவர்ஸ் செய்ய முடியுமா?
- லதா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.
``கூந்தலின் ஃபாலிக்கிள் எனப்படும் நுண்ணறைகளில் மெலனின் எனும் நிறமிகள் இருக்கும். இந்த நிறமி உற்பத்தி குறைகிறபோது கூந்தல் கருமையை இழந்து நரைக்கத் தொடங்குகிறது.
மரபியல் காரணங்கள், பிட்யூட்டரி அல்லது தைராய்டு சுரப்பிகளில் ஏதேனும் பிரச்னைகள், வைட்டமின் பி12 குறைபாடு, தவறான உணவுப் பழக்கம், இரும்புச்சத்து, தாமிரச்சத்து மற்றும் அயோடின் சத்துகள் உணவில் போதுமான அளவு இல்லாமல் போவது, ஸ்ட்ரெஸ், கூந்தலை சுத்தமின்றி வைத்திருப்பது, அதிக சூடான நீரில் தலைக்குக் குளிப்பது, மலச்சிக்கல் என இளநரைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
உங்கள் மகளைப் போல டீன் ஏஜில் இருக்கும் பலரும் இன்று சத்துக்குறைபாடுகளுடன், குறிப்பாக ரத்தச்சோகையுடன் இருக்கிறார்கள். அது இளநரைக்கு மிக முக்கிய காரணமாகிறது.
நரையை ரிவர்ஸ் செய்வது சாத்தியமில்லாத விஷயம். ஆனால், அது மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு சில எளிமையான வழிகள் உள்ளன.
* கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துக் கழுவி, முதல்நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் அதை அப்படியே கொதிக்க வைத்து தினம் ஒருவேளை குடிக்கவும்.
* நிறைய பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
* சிறிது தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் ஈஸ்ட் கலந்து. ஒவ்வொரு முறை உணவுக்கு முன்பும் இதைக் குடிக்கவும். இளநரைக்கான எளிமையான சிகிச்சை இது.
* ஒன்றிரண்டு நரை முடிகளைப் பார்த்த உடனேயே கூந்தலுக்கு டை அடிக்க வேண்டாம். அதைப் பிடுங்கவும் வேண்டாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/wcAgtim
0 Comments