விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. 23 வயது. இளம் விவசாயியான இவர், ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் விவசாய பணிக்காக தவணை முறையில் டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 30,000 ரூபாய் என்ற வீதத்தில் தவணைத் தொகை கட்டி வந்துள்ளார். இதனிடையே கொரோனா சமயத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், தற்சமயம் இரண்டு தவணைகள் வரை தொகை கட்டாமல் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சின்னதுரையின் ஊருக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், சின்னதுரையை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், அதனை தொடர்ந்து விவசாய நிலத்தில் இருந்த டிராக்டரை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சின்னதுரை குடும்பத்தினர் சிலர் தற்கொலை முயற்சி எடுத்தனராம். அதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களின் முயற்சியை தடுத்து காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து மன வேதனையில் இருந்த சின்னதுரை நேற்று மதியம் தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும், மேல்மலையனூர் தேர் திருவிழா என்பதால் அங்கு சென்றிருந்த காவல்துறையினர் நீண்ட நேரமாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், நியாயம் கேட்டு சின்னதுரையின் உடலுடன் நேற்று மாலை 5 மணி அளவில் தேவனூர் கூட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று இரவு 8.00 மணியைத் தாண்டியும் சென்றுள்ளது. இதனால் கிலோமீட்டர் கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வளத்தி காவல்துறையினர், விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சின்னதுரையின் உறவினர்கள் கலைந்து சென்றுள்ளனர். இ.எம்.ஐ கட்டாத காரணத்தினால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்துவிட, மன உளைச்சலில் இருந்த இளம் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களின் மீது 294 B, 341, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் வளத்தி காவல்துறையினர்.
மேலும் விவசாய சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சின்னதுரை தற்கொலைக்காக களத்தில் இறங்கி குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் இன்று சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
from Latest News https://ift.tt/3MOGZpS
0 Comments