தஞ்சாவூரின் மைய பகுதி என சொல்லப்படுகிற பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் சிலையினை அகற்றி அருகிலேயே உள்ள சுதர்சன சபா இடத்தில் மாற்றியமைக்கலாம் என திமுக மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த திமுக கவுன்சிலர்கள் அண்ணா சிலையை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் விரிவாக்கம், கோடி கணக்கில் மதிப்புடைய மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தனி நபர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையர் இதனை திறம்பட செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேயர் சண்.ராமநாதன் தலைமையில் முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் அண்ணா சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் மாற்றியமைப்படும் என அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஒன்று. அண்ணா சிலை அகற்றுவதற்கு திமுக கவுன்சிலர்களாக நீலகண்டன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து 40வது வார்டு திமுக கவுன்சிலரான நீலகண்டனிடம் பேசினோம், ``1968-ல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது உடல் நிலை முடியாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பொதுப்பணிதுறை அமைச்சராக இருந்த கருணாநிதி தஞ்சாவூரில் அண்ணா சிலை திறப்பதற்கு ஏற்பாடு செய்தார். அப்போதைய கல்வித்துறை அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன், மன்னை நாராயணசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள கலைஞர் கருணாநிதி சிலையினை திறந்து வைத்தார்.
சிலை திறக்கப்பட்ட போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அண்ணாவை நினைத்து அப்போது பலரும் கண்ணீர் விட்டு அழுததாக திமுக சீனியர்கள் இன்றைக்கும் பேசி வருகின்றனர். அண்ணா புத்தகம் படிப்பது போல் வைக்கப்பட்ட முதல் சிலையும் இது தான். சிறப்பு மிக்க அண்ணா சிலையினை அதிமுக ஆட்சியில் எடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனையறிந்த கலைஞர் கருணாநிதி, அண்ணா சிலை அகற்றும் முயற்ச்சியை கைவிட வேண்டும். இல்லை என்றால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என கூறினார். அதனை தொடர்ந்து சிலை அகற்றுவதை கைவிட்டனர். தற்போது திமுக ஆட்சி நடக்கிறது. எங்க கட்சியை சேர்ந்தவர்களான சண்.ராமநாதன் மேயராகவும், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி பதவி வகித்து வருகின்றனர். திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியிருக்கிறது.
இந்த சூழலில் அண்ணா சிலையை அகற்றுவதற்கு அவசரத் தீர்மானம் போடப்பட்டுள்ளது திமுக கவுன்சிலர்களை மட்டுமல்ல அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் நம்பர்களை வாசித்து கொண்டிருக்கும் போதே நாங்கள் அண்ணா சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் எழுந்து சென்று விட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு அண்ணா சிலை அகற்றப்படுவதை தடுக்க வேண்டும்” என்றார்.
சமூக ஆர்வலரான வீரசேனன், ``தஞ்சாவூர் ரயில் நிலையம் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதும் தொடர்கிறது. ரயில் நிலையத்திற்கு எதிரே தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் உள்ளன. அண்ணா சிலையை அகற்ற நினைப்பதை போல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் அவர்களால் அகற்ற முடியுமா?” என கேள்வி எழுப்பினர்.
மேயர் சண்.ராமநாதனிடம் பேசினோம், ``பேரறிஞர் அண்ணா உயிருடன் இருக்கும் போதே மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களால் வரலாற்று சிறப்புமிக்க வகையில் திறக்கப்பட்ட சிலை. அதனை சுற்றி அழகுபடுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. தீர்மானத்தில் சிலையினை அகற்றி சில மீட்டர் தொலைவிலான இடத்தில் வைக்கப்பட இருப்பதாக தவறுதலாக வந்து விட்டது. அண்ணா சிலை இருக்கும் இடத்தை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/bApvzTM
0 Comments