நாமக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் அதிமுக ஒரே ஒரு வார்டை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், 'ஒத்தை அ.தி.மு.க கவுன்சிலராக இருந்து ஒன்றும் செய்யமுடியாது' என்று தி.மு.கவில் இணைந்து, அ.தி.மு.கவினரை அதிர வைத்திருக்கிறார்.
அதிமுக கோட்டையாக இருந்த நாமக்கல், மெல்ல மெல்ல தி.மு.க கோட்டையாக மாறி வருகிறது. கடந்த, சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 5 நகராட்சிகளில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் ஆகிய 4 நகராட்சிகளை தனிப்பெரும்பான்மையுடம் திமுக கைப்பற்றியிருக்கிறது. குமாரபாளையம் நகராட்சியை சுயேச்சை கவுன்சிலர் விஜய்கண்ணன் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்டத்தின் தலைமைபீடமான நாமக்கல் நகராட்சியில் தி.மு.க, அ.தி.மு.கவை 'ஒயிட் வாஷ்' செய்துள்ளது. நாமக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில், தி.மு.க 36 வார்டுகளை கைப்பற்றியது. தவிர, சுயேச்சைகள் 2, அ.தி.மு.க 1 வார்டு என கைப்பற்றினர். கடைசியில், சுயேச்சைகள் இருவரும் தி.மு.கவில் இணைய, தி.மு.கவின் எண்ணிக்கை 38 ஆனது. 'அப்பாடா, ஒரு வார்டாச்சும் தப்பிச்சதே' என்று அ.தி.மு.கவினர் மகிழ்ந்த நிலையில், அந்த ஒரு கவுன்சிலரும் தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்து, அந்த கட்சியியில் ஐக்கியமாகி, அ.தி.மு.கவினருக்கு 'ஷாக்' கொடுத்திருக்கிறார். 29 வது வார்டில் வெற்றிப்பெற்ற ரோஜா ரமணி, தி.மு.கவை சேர்ந்தவர் தான். ஆனால், தி.மு.க சார்பில் சீட் தராததால், அ.தி.மு.கவில் இணைந்து, அந்த கட்சி சார்பில் நின்று வெற்றிப்பெற்றார்.
இந்த நிலையில், 'அ.தி.மு.கவில் ஒத்தை ஆளாக இருந்து செயல்படமுடியாது' என்று கூறி, நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தனது 'தாய்க்கழகமான' தி.மு.கவில் இணைந்துவிட்டார். இதனால், நாமக்கல் அ.தி.மு.கவினர், 'ஒரு வார்டும் போச்சே' என்று அங்கலாய்க்கின்றனர்.
``நாமக்கல் நகராட்சியில் வாஷ் அவுட் ஆனதோடு, மாவட்டம் முழுக்க பெரும்பான்மையான நகராட்சி, பேரூராட்சிகளை அ.தி.மு.க இழந்துள்ளது.
இதற்கு காரணம், .அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, சரியாக தேர்தல் பணியாற்றாததுதான். உடல்நிலையை காரணம் காட்டி, குமாரபாளையத்திலேயே இருந்துவிட்டார் என்கிறார்கள் கட்சியினர். நாமக்கல் நகராட்சியில் அ.தி.மு.க வாஷ் அவுட் ஆனதற்கு காரணம், அ.தி.மு.க நகர செயலாளர் கே.பி.பி.பாஸ்கர், வேலை பார்காததுதான். கடந்த 2011 ல் இருந்து 2021 வரை இரண்டு முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், நாமக்கல் நகராட்சியில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க எந்த முயற்சியும் எடுத்துக்கலை. செலவும் பண்ணலை. இப்படியே போனால், இனி நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.கவுக்கு தேய்பிறை மட்டும்தான். வளர்பிறை கிடையாது" என்று அ.தி.மு.கவினர் வெடிக்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/wAQB1Y6
0 Comments