மயிலாடுதுறை கோயில் ஐம்பொன் சிலை திருட்டு வழக்கு! - 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் ஐம்பொன் சிலை திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் ஏழு அண்டுகளுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த பழமையான காமாட்சி அம்மன் உலோகச்சிலை கடந்த 2014-ம் ஆண்டு காணாமல் போனது. இதுகுறித்து குத்தாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிலையை திருடி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் சிலை திருடப்பட்டது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மயிலாடுதுறை அருகே தாழஞ்சேரியைச் சேர்ந்த ரஜினி (46) தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரை போலீஸார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரஜினியை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ரஜினியை வரும் 15-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கைது

இதையடுத்து ரஜினியை போலீஸார் கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து விசாரணையினையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் செய்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோயிலின் உலோக சிலையை திருடி சென்ற வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/IcA7VlK

Post a Comment

0 Comments