கடந்த 2 ஆண்டுகளில் 21 பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது சாதி ரீதியான தீண்டாமை வன்கொடுமைகள் நடந்துள்ளதாக மதுரை எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிலையில், பட்டியலின பஞ்சாயத் தலைவர்கள் மீதான வன்கொடுமைகள் குறித்தது வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து மனித உரிமை செயல்பாட்டாளரான எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிரிடம் பேசினோம், ``பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மீதும் நடைபெறக்கூடிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பட்டியலினத்தவர் ஒருவர் அதிகாரத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி வெறியர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களில் 21 சம்பவங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் மட்டும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் இரண்டு நடந்துள்ளன. தென்காசி அருகிலுள்ள உள்ள ஊத்துமலை, இதுவரை பொது பஞ்சாயத்தாக இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு இந்த தொகுதி பட்டியலின பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது.
ஊத்துமலை கூட்டுறவு வங்கி செயலாளராக இருக்கக்கூடிய பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அய்யனார், தன் மனைவி வளர்மதியை தேர்தலில் நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். இதனால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஊத்துமலை முன்னாள் ஊராட்சித் தலைவர் தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.
சிவக்கனி என்பவர் மூலம் அய்யனார் மீது பல பொய்ப்புகார்களை அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது, மிரட்டுவது என பல்வேறு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பொய்ப்புகாரினால் ஒரு கட்டத்தில் அய்யனார் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊராட்சித் தேர்தலில் ஊத்துமலை ஊராட்சியில் வளர்மதி நிற்க எதிர்ப்பு தெரிவித்து ராஜகுமாரி என்கிற பெண்ணை தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியன் நிறுத்தினாலும் வளர்மதி வெற்றி பெற, ஆத்திரமடைந்த தாய்குலம் (எ) கருப்பசாமி பாண்டியனின் அக்கா மகன் மலையரசன் அன்று இரவே அரிவாளுடன் வளர்மதி வீட்டிற்கு சென்று, அய்யனாரை பார்த்து, 'உன் பொண்டாட்டி எப்படி பஞ்சாயத்து தலைவர் ஆகலாம், அவளை வெட்டாமல் விடமாட்டேன்' என்று கத்திக்கொண்டு வர அங்கிருந்தவர்கள் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துமலை போலீஸில் அய்யனார் புகார் தெரிவிக்க, 'தனக்கு குடும்பம் இருப்பதாகவும் இனி இப்படி நடந்து கொள்ளமாட்டேன்' என மலையரசன் மன்னிப்பு கேட்டதால் வழக்கு பதிவு செய்யாமல் அய்யனார் மன்னித்துள்ளார்.
கடந்த 23.03.2022 அன்று ஊத்துமலை பஞ்சாயத்துத் தலைவர் வளர்மதியும் கணவர் அய்யனாரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாலை ஊத்துமலைக்கு திரும்பியுள்ளனர்.
அங்கு நிறைகுளத்தான் (எ) கொத்தாலிகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் உள்ளாடையுடன் நின்று கொண்டு, ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியிருக்கின்றனர்.
அங்கிருந்த அய்யனாரின் உறவினர்கள், இப்படி ஆபாசமாக பேசலாமா என்றதற்கு, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.
ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பட்டியலினtஹ்தவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் பரமேஸ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார். பஞ்சாயத்து தலைவர் வளர்மதியும் கணவர் அய்யனாரும் அந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 நாள்களாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சை எடுத்து வருகிறார். குற்றவாளிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் அரக்கோணம் அருகில் உள்ள வேடல் பஞ்சாயத்தில் தலைவராக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கீதாவின் கணவர் மூர்த்தியை, கடந்த 01.04.2022 அன்று 6 பேர் கொண்ட கும்பல், சுத்தியாலும் பெரிய கற்களாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூர்த்தி தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதுவரை பொதுத் தொகுதியாக இருந்த வேடல் பஞ்சாயத்து 2021-ம் ஆண்டு தலித் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலில் நின்று கீதா வெற்றி பெற்றுள்ளார். துணைத் தலைவரான வெங்கடாஜலபதி காசோலையில் கையெழுத்திட மறுப்பது, கூட்டம் நடத்தவிடாமல் தடுப்பது, நாற்காலியில் உட்கார கூடாது என மிரட்டுவது என பல்வேறு வன்கொடுமைகளை கீதாவிடம் கடைபிடித்து வந்துள்ளார்.
கடந்த ஜனவரி 2022 மாதம் பொங்கல் விழாவை முன்னிட்டு நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் விநியோகிக்கும் போது அங்கு வந்த வெங்கடாஜலபதி, கீதாவின் கணவர் மூர்த்தியை பலர் முன்னிலையில் சாதி ரீதியாக இழிவாகப்பேசி தாக்கியிருக்கிறார்.
சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஹரிதாஸ் என்பவர் கீதாவின் கணவர் மூர்த்தியை சாதி ரீதியாக இழிவாகப்பேசி தாக்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் கோழிப்பண்ணை வைக்க என்ஓசி கேட்டதற்கு ஆவணங்கள் கேட்டதால், கடந்த 01.04.2022 அன்று இரவு ராஜகோபால் மற்றும் அருண், சிவா, சங்கர், அஜித், கிச்சான் (எ) கமலேஷ் உள்ளிட்ட கும்பல் கீதா வீட்டிற்கு வந்து கணவர் மூர்த்தியை அசிங்கமாக பேசிக் கொண்டே இரும்பு சுத்தியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
கூட வந்தவர்களும் செருப்பு காலால் மிதித்து பெரிய கற்களை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளனர். தடுக்கச் சென்ற கீதாவையும் ஆபாசமாக பேசி தாக்கியிருக்கின்றனர். உயிருக்கு பயந்து ஒவ்வொரு வீடாக கீதாவும் மூர்த்தியும் சென்றுள்ளனர்.
தற்போது மூர்த்தி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தலை, நெஞ்சு, முகம் என்று உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ராஜகோபால், அருண், சிவா, சங்கர் ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 21 பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும் தீண்டாமை குறித்தும் எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நடந்த 21 சம்பவங்களில் தேனி மாவட்டத்தில் 3-ம், மதுரை மாவட்டத்தில் 3-ம், சிவகங்கை மாவட்டத்தில் 2-ம், திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் திருவண்ணாமலை, கடலூர், சேலம், திருவள்ளுர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தர்மபுரி, அரியலூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன.
பட்டியலினத்தவர்கள், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களாக, உறுப்பினர்களாக பொறுப்பிற்கு வருகிற போது மாற்று சமூகத்தினரில் சிலர் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் சாதிரீதியாக இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது அப்பட்டமான சாதிய வன்கொடுமையாகும்.
பட்டியலின பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற தலைவர்கள், உறுப்பினர்களை பணி செய்யவிடாமல் குறுக்கீடு செய்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 3(1)(m)ன் கீழ் மிகப்பெரிய குற்றமாகும்.
ஆகவே தமிழக அரசு பட்டியலின தலைவர்கள் மீது சாதிரீதியாக தாக்குதலில் ஈடுபடுவது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற வன்கொடுமையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
சாதி ரீதியாக குறுக்கீடு செய்பவர்கள் துணைத் தலைவராகவோ மற்ற உறுப்பினர்களாகவோ இருக்கிறபட்சத்தில் அவர்களை பொறுப்பு நீக்கம் செய்ய வேண்டும். அச்சுறுத்தல் இருக்கக்கூடிய பட்டியலின தலைவர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்." என்றார். தமிழக அரசு இப்புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/U9E6pL4
0 Comments