90 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜெர்மனி முதியவர்! - காரணம் என்ன தெரியுமா?

ஜெர்மனியைச் சேர்ந்த நபர் ஒருவர் கோவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை 90 முறை செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் மெக்டபெர்க் (Magdeberg) நகரைச் சேர்ந்த 60 வயதான இந்த நபர் போலியாக தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து தரும் பணியை செய்து வந்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு இத்தகைய போலி சான்றிதழ்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சான்றிதழ்களில் இருந்த வரிசை எண் உண்மையான எண்ணாக இருப்பதற்காக இவர் தானே 90 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதில் கிடைக்கும் சான்றிதழ்களில் மற்ற விவரங்களை மாற்றி நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி

சமீபத்தில் எலியன்பெர்க்(Elienberg) என்ற ஊரில் இருந்த தடுப்பூசி முகாமில் தொடர்ந்து அடுத்த அடுத்த நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தற்போது பிடிபட்டுள்ளார். இவரிடம் இருந்து சில தடுப்பூசி சான்றிதழ் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரைப் பற்றிய வேறு விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை. ஆனால் முறையற்று‌ சட்டத்திற்கு எதிராக தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கியதற்காக இவர் விசாரணையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த நபரின் உடல்நிலையும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெவ்வேறு தடுப்பூசிகளைப் பலமுறை செலுத்திக் கொண்டதால் அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏதும் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் ஜெர்மனியில் இதுபோன்ற பல போலி தடுப்பூசி சான்றிதழ்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள பலர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தடுப்பூசி செலுத்தாமலே போலி சான்றிதழ்கள் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். பொது இடங்களான உணவகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும், பணியிடங்களிலும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாகத் தேவைப்படுவதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.



from Latest News https://ift.tt/WsMtVk5

Post a Comment

0 Comments