புதுச்சேரி: ``ஸ்மார்ட் சிட்டி நிதியை காங்கிரஸ் ஆட்சியில் செலவு செய்யவில்லை!” - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு செய்யப்பட்ட வளர்ச்சித்திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ”இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரி மாநிலம் எந்தெந்த நிலையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நாம் எண்ணி பார்க்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் செய்ய முடியாத, செய்து முடிக்க முடியாத அனைத்து திட்டங்களையும் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.

அமித் ஷாவுடன் முதல்வர் ரங்கசாமி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நமக்கு ஒதுக்கி கொடுத்த நிதி கடந்த ஆட்சியில் செலவு செய்யப்படவில்லை. நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.600 கோடிக்கும் மேலான திட்டங்களை உள்துறை அமைச்சர் மூலம் இப்போது தொடங்கியிருக்கிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தோம். இப்போது 390 இளைஞர்கள் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

எங்களுடைய அரசானது 10,000 அரசு பணியிடங்களை நிச்சயமாக நிரப்பும். அதேபோல் புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்து கொண்டிருக்கிறது. மேலும் கூடுதல் நிதி வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதையும் நிச்சயமாக பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.150 லட்சத்துடன், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் ரூ.2 லட்சத்தையும் இணைத்து ரூ.3.50 லட்சமாக வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வீடு கட்ட ரூ.5.50 லட்சம் வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு அறிவித்தப்படி பிள்ளைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வியை கொடுத்து கொண்டிருக்கிறது.

மேலும் மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் அறிவித்தப்படி பெஸ்ட் புதுச்சேரியை இந்த அரசு நிறைவேற்றும். மத்திய அரசு நமக்கு கூடுதலாக நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமக்கு கூடுதல் நிதி வழங்க ஆவண செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தி நம்முடைய வருவாயை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்தும். உள்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு விரைவாக செய்து முடிக்கும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/sHtwRGY

Post a Comment

0 Comments