``இயற்கை அன்னையை சட்டப்பூர்வ நபராக அறிவிக்கிறோம்!" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

"இயற்கை அன்னைக்கு உரிய அந்தஸ்தை வழங்க நீதிமன்றத்துக்கு இது சரியான நேரம். அதனால் தேசிய அதிகார வரம்பின் மூலம் இயற்கை அன்னையை சட்டப்பூர்வ நபர் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது.

இயற்கை அன்னையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேகமலை

பெரியகுளத்தில் துணை ஆட்சியராக பணியாற்றிய தேனியைச் சேர்ந்த பெரியகருப்பன் கடந்த 2006-ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவர் ஆண்டிப்பட்டி தாசில்தாராக பணியாற்றியபோது மேகமலையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் ஓய்வு பெற அனுமதிக்காமல் கடந்த 2009-ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. அதனால் அவர் ஓய்வூதியம் குறைவாக அளிக்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "மேலதிகாரிகளின் உத்தரவின்படியே நடந்ததாக மனுதாரர் கூறுகிறார். எனவே, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.இயற்கை அன்னையை பாதுகாக்க வேண்டும். கண்மூடித்தனமான நடவடிக்கையால், சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

விலங்குகள், தாவரங்கள், காடுகள், ஆறுகள், மலைகள், நீர்நிலைகள் மற்றும் காற்று உள்ளிட்டவை மனிதர்களால் பெரும் ஆபத்தை சந்திக்கின்றன.

மதுரை உயர் நீதிமன்றக்கிளை

புவிப்பரப்பில் தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் 5 சதவிகிதம் உள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 95 சதவிகிதம் மனிதர்களையே கொண்டுள்ளது. இந்த 5 சதவிகிதம்தான் மீதமுள்ள ,95 சதவிகித நிலப்பரப்பில் உள்ள மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை தருகிறது. அந்த 5 சதவிகித பகுதிக்குள்ளும் ஊடுருவ மனிதன் ஏன் ஆசைப்படுகிறான் என்று தெரியவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நாம் மீள முடியாது. இயற்கையான சூழல் என்பது மனிதனின் அடிப்படை உரிமை.

மனித வாழ்க்கையால் அமேசான் காடுகள், கடல் வாழ் உயிரினங்கள், புலிகள், பனிப்பாறைகள் உள்ளிட்டவையும் கூட அழிவை சந்தித்துள்ளன.

காடுகள் அழிக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் தொழில், சுரங்கங்கள் மற்றும் அணைகள் கட்டுவதற்காகவும் காடுகள் அழிவை சந்திக்கின்றன.

காட்டிலுள்ள புலிகளை கொன்று, அங்கு விவசாயம் செய்ய அனுமதிப்பது என்பது இயற்கைக்கு எதிரானது. நிலையான வளர்ச்சி என்பது நிலையான அழிவாகிவிடும். இயற்கையை பாதுகாத்திடும் வகையில் இயற்கை உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.

இயற்கை அன்னை

கடந்த தலைமுறையினர் நம்மிடம் ஒப்படைத்த அன்னைபூமியை பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த தலைமுறைக்கான நீதியை வழங்க இதுவே சரியான நேரம்.

இயற்கை அன்னைக்கு உரிய அந்தஸ்தை வழங்க நீதிமன்றத்துக்கு இது சரியான நேரம். அதனால் தேசிய அதிகார வரம்பின் மூலம் இயற்கை அன்னையை சட்டப்பூர்வ நபர் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது.

இயற்கை அன்னையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், "முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் இதில் தொடர்புடைய மற்றவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு அளிக்கப்பட்ட கட்டாய ஓய்வு மாற்றியமைப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Zg6mXRo

Post a Comment

0 Comments