CSK :"ஒரு கேப்டன் இதையெல்லாம் செய்ய வேண்டும்!" - தலைமைப் பண்புகளை பட்டியலிட்ட தோனி!

இந்த சீசன் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இம்முறை தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே தொடர்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு செம அதிர்ச்சியாக இருந்தாலும் அணியின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், தொடர் தோல்வியால் பரிதவித்தது சென்னை அணி. ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டமும் பெரும் சரிவைக் கண்டிருந்தது. இந்நிலையில்தான் நேற்று மீண்டும் தோனியே சி.எஸ்.கே கேப்டனாக செயல்படுவார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு இதுவும் சர்ப்ரைஸாகவே இருந்தது. 'இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே' என்பதே அவர்களின் ரியாக்ஷனாக இருந்தது. ஜடேஜா சொந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது அதிகாரபூர்வ அறிக்கை.

MS Dhoni
இந்நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற தோனி, ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு வின்னிங் கேப்டனாக பேச வந்தார். இந்த எட்டு போட்டிகளும் சேர்த்து அவரிடம் கேள்விகளை அடுக்கினார் பாமி எம்பாங்வா. இதில் கேப்டன்ஸி குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார் தோனி!

கேப்டன்ஸி குறித்து தோனி பேசியது:

"கடந்த சீசனின் போதே கேப்டன்ஸி வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது ஜடேஜாவுக்கு தெரியும். அதற்குத் தயாராவதற்கு போதிய நேரம் அவருக்கு இருந்தது. இந்த மாற்றம் படிப்படியாக நிகழ வேண்டும் என நினைத்தோம். முதல் இரண்டு போட்டிகளில் நிறைய விஷயங்கள் என்னிடமிருந்து ஜடேஜாவுக்கு சென்றன. அதற்குப் பிறகு முடிவுகள் எடுக்கும் பொறுப்பை மொத்தமாக ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டேன். இந்த சீசன் முடியும்போது கேப்டன்ஸி வேறு யாரோ செய்த உணர்வு இருக்கக்கூடாது, வெறும் டாஸ்ஸுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த உணர்வு அவருக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதனால் படிப்படியாக அவரிடம் முழு பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

Jadeja with Dhoni

களத்தில் ஒரு கேப்டன் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவேண்டும். அணியின் பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் சொந்த பர்ஃபாமென்ஸும் அடங்கும். மனதளவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் அதைப்பற்றியேதான் யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கும். தூங்கும்போதுகூட இது நடக்கும்.

கேப்டன்ஸியால் ஜடேஜாவும் சொந்த ஆட்டம் பாதிக்கப்பட்டது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கும் ஜடேஜா அணிக்குத் தேவை. கேப்டன்ஸி இல்லை என்றால் அவர் கிடைப்பார் என்றால் அதுதான் அணிக்கும் தேவை. நாங்கள் ஒரு சிறப்பான ஃபீல்டரை இழந்தோம். டீப் மிட்-விக்கெட் பொசிஷனில் நல்ல ஒரு ஃபீல்டரை நிறுத்தப் போராட வேண்டியதாக இருந்தது. எப்படியும் 17-18 கேட்ச்களை இதுவரை விட்டிருக்கிறோம்."

அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மே 4-ம் தேதி மோதுகிறது சென்னை!



from Latest News https://ift.tt/7ug85PB

Post a Comment

0 Comments