தூத்துக்குடி, சுப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆல்வின். இவரின் மனைவி முத்துலட்சுமி. இந்தத் தம்பதியின் மகன் தனுஷ் டார்வின். இவர், தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உடைய மாணவரான தனுஷ் டார்வின், மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடந்த பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
திருக்குறள் மீது கொண்ட பற்றால், அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதமாக,133 காகிதத் தட்டுகளில், திருவள்ளுவர் படங்களை ஓவியமாக வரைந்தார்.
இரண்டு மணி நேரத்தில் வரைந்து முடித்த இந்த ஓவிய சாதனையை, புதுச்சேரியில் உள்ள ’ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் இணையதளம் மூலம் பதிவு செய்தது. இது குறித்து மாணவர் தனுஷ் டார்வினுடன் பேசினோம்.
“மூணாம் கிளாஸ் படிக்கும்போதே எனக்கு ஓவியத்துல ஆர்வம் வந்துச்சு. காய்கறிகள், பழங்கள், விலங்குகள்னு உருவங்களைப் பார்த்துதான் வரைஞ்சேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா திறமைய வளர்த்துக்கிட்டேன்.
ஓவிய வகுப்புகள் எதுக்கும் நான் போனதில்ல. ஒரு உருவத்தை ஒரு முறை உன்னிப்பா பார்த்துட்டாலே அதை அப்படியே வரைஞ்சுடுவேன். நண்பர்கள், உறவினர்களோட உருவங்களை வரைஞ்சு அவரவர் பிறந்தநாள்கள்ல பரிசா கொடுத்திருக்கேன். என்னைப் போல டிராயிங்க்ல ஆர்வம் இருக்குற நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்.
புத்தகங்கள்ல எனக்குப் பிடிச்சது திருக்குறள். திருக்குறளோட பெருமைகளையும், சிறப்புகளையும் எங்க டீச்சர் நிறைய சொல்லியிருக்காங்க. இப்படிப்பட்ட புத்தகத்தை தேசிய நூலா அரசு அறிவிக்கணும்னு என்னோட கோரிக்கையை அரசுக்குத் தெரியப்படுத்துற விதமா, இந்த சாதனையை செய்ய நினைச்சேன்.
பேப்பர் தட்டுகள்ல திருவள்ளுவரோட உருவத்தை வரைஞ்சிருக்கேன். 133 அதிகாரங்களைக் குறிக்கிற விதமா, 133 பேப்பர் தட்டுகள்ல வள்ளுவர் ஐயாவோட உருவத்தை இரண்டு மணி நேரத்துக்குள்ள வரைஞ்சு முடிச்சிருக்கேன். எதிர்காலத்துல பெரிய கார்ட்டூனிஸ்ட் ஆகணும்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார்.
வாழ்த்துகள் ஓவியரே!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/YHgfC37
0 Comments