``சேகர் பாபுவை ஹீரோவாக ஆக்கியவன் நான்தான்; அவருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!” - துரைமுருகன்

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, வேலூர் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எம்.பி-க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘சேகர் பாபுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். இந்து அறநிலையத்துறை என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருக்கிற துறை. இது, ஓர் அரசு விழா. அப்படியிருக்க, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடாமல் விட்டது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாக்களில், தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது அரசின் நியதி.

விழாவில் பேசிய துரைமுருகன்

எனவே, அடுத்த நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று பணிவன்போடு தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். சட்டமன்றத்தில், கலைஞர் 56 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். அவருக்கு அடுத்து 53 ஆண்டுகளாக சபையில் உறுப்பினராக உட்கார்ந்திருப்பவன் நான்தான். சீனியர் மோஸ்ட். என் வாழ்க்கையில், 15 அறநிலையத் துறை அமைச்சர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், எந்த அமைச்சரும் சேகர் பாபுக்கு இணையாக இருந்தார்கள் என்று என்னால் சுட்டிக்காட்ட முடியவில்லை. ஏதோ, எனக்கு வேண்டியவர் என்பதற்காக சொல்லவில்லை. அந்தத் துறையைப் பற்றி எனக்குத் தெரியும்.

அறநிலையத் துறையைப் பத்திரிகைத் துறையைப்போல உருவாக்கி, எல்லோரும் பாராட்டக்கூடிய அளவுக்கு நடத்திகொண்டிருக்கிறார்.

எங்கள் துறையை சிலர் பாராட்டுவார்கள். சிலர் எதிர்ப்பார்கள். ஆனால், அறநிலையத் துறையை ஆசிரியர்கள், படித்தவர்கள், பண்புள்ளவர்கள், பாமரர்கள் என ஒட்டுமொத்தமாகவே பாராட்டுகிறார்கள். ‘நம்பர் ஒன் மினிஸ்டர்’ என்ற பெருமையை நம் சேகர் பாபு பெற்றிருப்பது மிகழ்ச்சியாக இருக்கிறது. சேகர் பாபு அ.தி.மு.க-வில் இருந்தபோது, அவரை ஹீரோவாக ஆக்கியவனும் நான்தான். அவர், எந்தக் கட்சியில் இருந்தாலும் உண்மையாக இருப்பவர். ஒருநாள் சட்டமன்றத்தில் பலமாக நம்மை தாக்கி பேசினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு

கலைஞரைப் பற்றி பேசும்போது, உடனே நான் எழுந்து மறுத்து பேசினேன். இருவருக்கும் பெரிய டிஸ்கஷனே நடந்தது. மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தி வெளியானது. அன்றைக்கு சட்டசபைக்குவந்த வந்த சேகர் பாபு, ‘அண்ணே, அடிக்கடி ஏதாவது கிராஸ் பண்ணுங்க. அப்போதுதான் எனக்குப் பேர் வரும்’ என்றார். அன்றைக்கு அவரை எதிர்த்து குரல் கொடுத்தேன். இன்றைக்கு எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து அமைச்சராக வந்திருக்கிறார் என்றால் அவருக்கும் என்னுடைய ராசி இருக்கிறது என்றுதான் பொருள்’’ என்றார்.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், ‘‘வரும் காலங்களில் திராவிட இயக்க வரலாற்றுப் புத்தகங்களில் அதிக இடங்களை தக்க வைத்துகொள்ள இருக்கின்றவர் அண்ணன் துரைமுருகன். இந்து சமய அறநிலையத் துறைச் சார்ந்த இந்த அறங்காவலர் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய சகோதரி ஒருவரும் கலந்துகொண்டிருக்கிறார். இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி. ஏற்றுகொண்ட பொறுப்பு எதுவென்பது பொருளல்ல. நிகழ்வு சிறியதாக இருந்தாலும், அதனுடைய கீர்த்தி பெரியது’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/HtWX3Bj

Post a Comment

0 Comments