கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருந்த நேரம், பல நாடுகளிலும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் ஊரடங்கு, மக்களை மாஸ்க் அணிய வலியுறுத்தியது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைத்தது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியது எனத் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு கடுமையாகக் கடைப்பிடித்ததோடு, பயணங்கள், பொது இடங்களுக்குச் செல்ல மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை இரண்டு தவணைகளில் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பலரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி, இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களின் பெயர்களை தமிழக அரசு பொதுமக்களின் பார்வைக்குப் பகிர்ந்துள்ளது. அதாவது, மாநிலத்தில் உள்ள 388 தொகுதிகள் கொண்ட 46 சுகாதாரப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1.4 கோடி மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவில்லை. இவர்களின் பெயர்கள் https://tndphpm.com/ என்ற இணையதளப் பக்கத்தில் ஏப்ரல் 25 அன்று பகிரப்பட்டு, மே 6-ம் தேதி வரை இருந்தது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பட்டியலில் உள்ள மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டிய தடுப்பூசி வகை, முதல் டோஸ் போடப்பட்ட தேதி, இடம், தொலைபேசி எண் போன்ற தனிநபர் தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன. நோய்த்தடுப்பு அதிகாரிகள் கோவின் பக்கத்தில் இருந்து, அந்தப் பெயர் பட்டியல் விவரங்களை பதிவிறக்கி, பொது இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை உருவாக்குவதாகத் தெரிவித்தனர்.
மக்களின் தனிப்பட்ட தகவல்களை பொது தளத்தில் பகிர்ந்த தமிழ்நாடு அரசின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து பொது சுகாதார இயக்குநர் டி.எஸ். செல்வ விநாயகம் பதிலளிக்கையில், 'பொது தளத்தில் இந்தப் பட்டியல் உள்நோக்கமின்றி பதிவேற்றப்பட்டுவிட்டது. மக்களை அவமானப்படுத்தவோ, தனிஉரிமையை மீறும் நோக்கத்திலோ இதை பதிவேற்றவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
from Latest News https://ift.tt/CZGmA01
0 Comments