Doctor Vikatan: 5 வயதுப்பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி... சிகிச்சை அவசியமா?

என் பேத்திக்கு 5 வயதாகிறது. அவளுக்கு இப்போதே கை, கால்களில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. அவள் வளரும்போதும் இப்படித்தான் இருக்குமா? வளர வளர சரியாகிவிடுமா? மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டினால் பிரச்னை சரியாகுமா? இதற்கு வேறென்ன தீர்வு?

சருமநல மருத்துவர் பூர்ணிமா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

உடலில் அதிக முடி வளர்கிற பிரச்னையில் இரண்டு விதம் உண்டு. ஒன்று `ஹைப்பர் டிரைகோசிஸ்' (hypertrichosis); இன்னொன்று `ஹர்சுட்டிஸம்' ( hirsutism) எனப்படும். பெண் குழந்தைகளுக்கு உடலெங்கும் அதிக முடி வளர்வதற்கான காரணங்களில் இவைதான் பிரதானமானவை.

ஹைப்பர் டிரைகோசிஸ் என்பது உடலில் பல இடங்களிலும் முடி வளரும் பிரச்னை. அவை, கொஞ்சம் அடர்த்தியாகவும் இருக்கும். ஹர்சுட்டிஸம் என்பது ஆண்களுக்கு முடி வளரும் மீசை, தாடி போன்ற இடங்களில் வளர்வதைக் குறிப்பது.

5 வயதுக் குழந்தை என நீங்கள் குறிப்பிட்டிருப்பதால் உங்கள் பேத்திக்கு உடல் முழுவதுமே இந்த பிரச்னை இருக்கக்கூடும் என்றே தெரிகிறது. இதற்கான காரணங்கள் பல...

Health Benefits of Turmeric

குழந்தைகளில் சிலருக்கு ஃபிட்ஸ் எனப்படும் வலிப்புநோய் வருவதுண்டு. அதற்கு எடுத்துக்கொள்ளும் ஒருவித மாத்திரையால் `ஹைப்பர் டிரைகோசிஸ்' பாதிப்பு வரலாம். சீலியாக் நோய், தைராய்டு போன்ற பாதிப்புகளும்கூட காரணமாகலாம்.

இவையெல்லாம் அசாதாரணமான முடி வளர்ச்சிக்கான காரணங்கள். உங்கள் பேத்திக்கு எந்த வயதில் இருந்து முடி வளர்ச்சி இருக்கிறது, எங்கெல்லாம் அதிக முடி வளர்ச்சி காணப்படுகிறது, அதன் தன்மை எப்படியிருக்கிறது என்ற எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் இதை நீங்கள் சாதாரண பிரச்னை என அலட்சியம் செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கங்களைச் சொல்கிறேன்.

நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முடியானது ஒவ்வொருவிதமாகக் காணப்படும். அதாவது, உடலில் காணப்படும் முடியானது மெல்லிதாக, லைட் நிறத்தில் இருக்கும். அதை `வெல்லஸ் ஹேர்' (Vellus hair) என்கிறோம். அதுவே தலையில் உள்ள முடியாது அடர்த்தியாக கறுப்பாக இருக்கும். அது 'டெர்மினல் ஹேர்' (Terminal hair) எனப்படும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவது, ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிப்பது போன்றவை எல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை கொடுப்பதுதான் முறையான அணுகுமுறை. மற்றபடி இது சாதாரண முடி வளர்ச்சிதான், உங்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறது என்றால், அதை அகற்ற நினைக்கவோ, அதுபற்றி கவலைப்படவோ தேவையில்லை.

Skin Care

முடி நீக்கும் சிகிச்சைகள் பெரும்பாலும் லேசர் முறையில் செய்யப்படும். அவை 18 வயதுக்குப் பிறகுகே செய்யப்படும். புறத்தோற்றம் சார்ந்த விஷயமாக இதைப் பார்த்தீர்கள் என்றால் குழந்தையின் 18 வயது வரை காத்திருந்து பிறகு, அதை நீக்கும் சிகிச்சையை மேற்கொள்வதே சரியானது. அதற்கு முன் மருத்துவரை அணுகி, குழந்தையின் முடி வளர்ச்சிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/z0wj2Vu

Post a Comment

0 Comments