நாமக்கல் டு சேலம் சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டை, தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். சென்னை மாநகராட்சி போல் முகப்பில் செட் அமைத்திருந்தார்கள்.
மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு சைவம், அசைவம் என மதிய உணவு பரிமாறப்பட்டது. இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, சுபவீரபாண்டியன், திருச்சி சிவா, மா.சுப்பிரமணியன், பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளிலும் பேசினர்.
'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற தலைப்பில் பேசிய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ``’பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு’ என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அதனால், பா.ஜ.க அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன். உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று ஆவேசமாக பேசினார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/blJcNuv
0 Comments