Doctor Vikatan: தினமும் பரோட்டா சாப்பிட்டால் நீரிழிவு வருமா?

என் நண்பனுக்கு வயது 55. கடந்த பல வருடங்களாக தினமும் இரவில் பரோட்டாதான் சாப்பிடுவார். இப்படி தினமும் பரோட்டா சாப்பிடுவது ஆரோக்கியக் கேடு என்று சொன்னால் கேட்க மறுக்கிறார். ஆனால் அவருக்கு இதுவரை சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறார். பரோட்டா சாப்பிட்டால் நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும் என்று சொல்லப்படும் நிலையில் இதை எப்படிப் புரிந்து கொள்வது?

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி...

தினமும் பரோட்டா சாப்பிடும் பழக்கம் சரியானதே இல்லை. பரோட்டா ஆரோக்கியமில்லாத உணவு என்று வலியுறுத்தக் காரணம், அதைத் தயாரிக்கப்பயன்படுத்தும் மைதாவும், தயாரிப்பு முறையும்தான்.

பரோட்டா சாப்பிடும் எல்லோருக்கும் நீரிழிவு வரும் என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் பரோட்டா சாப்பிடுவதால் நீரிழிவு மட்டும்தான் வரும் என்றும் சொல்ல முடியாது. சிலருக்கு அபூர்வமாக எந்தப் பிரச்னையும் வராமலும் இருக்கலாம். அப்படி எந்த பாதிப்பும் வராமலிருப்பவர்கள் மிகமிக குறைவே.

Diabetes

அதாவது 100 பேர் பரோட்டா சாப்பிடுகிறார்கள் என்றால் அவர்களில் இரண்டு பேருக்கு எந்தப் பிரச்னையும் வராமலிருக்கலாம். அதைவைத்து மீதி 98 பேருக்கும் பரோட்டா சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் வராது, சாப்பிடுங்கள் என்று சொல்ல முடியாது. சாலையில் பயணிக்கிற எல்லோருக்கும் விபத்து நிகழ்வதில்லையே... யாரோ சிலருக்கு விபத்து நிகழ்வதைப் போன்றதுதான் இதுவும்.

பரோட்டா சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியத்துக்குப் புறம்பானதுதான். என்றோ ஒருநாள் சாப்பிடலாமே தவிர, உங்கள் நண்பரைப் போல தினமும் சாப்பிடுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பல வருடங்களாக பரோட்டா சாப்பிடும் உங்கள் நண்பருக்கு நீரிழிவு வேண்டுமானால் வராமலிருக்கலாம். ஆனால் அவருக்கு மலச்சிக்கல், அஜீரணம், சர்க்கரைநோய்க்கு முந்தைய 'ப்ரீ டயாபட்டிஸ்' போன்றவை இருக்கலாம்.

ப்ரீ டயாப்பட்டிஸ் நிலை என்பது பெரிதாக அறிகுறிகளைக் காட்டாது. ரத்தப் பரிசோதனையில்தான் தெரியவரும். சிலருக்கு மலக்குடல் புற்றுநோய் வரும் ஆபத்தும் இருக்கிறது.

மலச்சிக்கல்

எனவே உங்கள் நண்பருக்கு இந்த விஷயங்களை வலியுறுத்தி அவரது உணவுப்பழக்கத்தை மாற்றச் சொல்லுங்கள். ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு ப்ரீ டயாப்பட்டிஸ் இருக்கிறதா என்றும் பார்க்கச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/0qDu431

Post a Comment

0 Comments