நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்த கலியன் - சிதம்பர வடிவு தம்பதியின் மகன் மகேஷ். 27 வயது நிரம்பிய இவர், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த ஏஜென்டுகள் ஆண்டனி சிவக்குமார், ஆண்ட்ரூ ஆகியோர் கம்போடியா நாட்டில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தன் மகன் ஊரில் சுற்றிக் கொண்டிருப்பதை விடவும் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லட்டும் என நினைத்த பெற்றோர் ஏஜென்டிடம் தன் மகனை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். அதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என ஏஜெண்டுகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து ஜூலை 7-ம் தேதி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு கம்போடிய மோசடி கும்பல் பற்றி தெரிந்திருக்கவில்லை.
வெளிநாட்டு வேலை என்ற ஆசையில் சென்ற மகேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. டேடா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்குச் சென்றவர், அங்குள்ள மோசடி கும்பலிடம் மாட்டிக் கொண்டார். ஆண்களின் புகைப்படத்தைப் பெண்களுடன் இருப்பது போன்று மார்ஃபிங் செய்து பணம் பறிக்கும் கும்பலிடம் வேலைக்குச் சேர்ந்த விவரம் அங்கு சென்ற பிறகே மகேஷுக்குத் தெரிந்துள்ளது.
அந்த சட்ட விரோத வேலையைச் செய்தால் எப்போது வேண்டுமானாலும் அந்நாட்டு காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய மகேஷ், சொந்த ஊருக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரது பாஸ்போர்டை பறித்து வைத்துக் கொண்டதால் ஊருக்குத் திரும்ப முடியாமல் அவர்கள் சொல்லும் செயலைச் செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதனால் தன்னை மீட்க தமிழ்நாடு அரசும், இந்திய வெளியுறவுத் துறையும் உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டிருக்கிறார். அவரின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ``இங்கு என்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் சீக்கிரம் என்னை மீட்டுச் செல்லுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மகேஷின் பெற்றோர் ஏஜென்டிடம் சென்று தன் மகனைத் திரும்ப அழைக்குமாறு கேட்டதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தங்கள் மகனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு மகேஷின் பெற்றோர் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், `கம்போடியாவில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கியுள்ள எங்கள் மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை என்ற மோகத்தால் சென்ற இளைஞர் மோசடி கும்பலிடம் சிக்கியிருப்பது நெல்லை மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Jvml7zy
0 Comments